உடல் நலமின்றியிருந்தாலும் திருத்தந்தையின் பணி ஆர்வம் குறையவில்லை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தையின் உடல் நலனுக்காக தொடர்ந்து செபித்து வரும் அனைவருக்கும் திருப்பீடம் தன் நன்றியை வெளியிடுவதாகவும், உடல் நலம் குன்றிய நிலையிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து திருஅவைக்கும் மனிதகுலத்திற்கும் சேவையாற்றி வருவதாகவும் தெரிவித்தார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
உடல் நலம் குன்றிய நிலையிலும் திருஅவைக்கும் மனித குலத்திற்குமான திருத்தந்தையின் பணி ஆர்வம் சிறிதளவும் குறையவில்லை என்ற திருப்பீடத்தின் வெளியுறவுத் துறையின் செயலர், பேராயர் காலகர் அவர்கள், உடல் நலமின்றியிருந்தாலும் அவரின் பணிகள் வேறுவிதமாகத் தொடர்கின்றன என்றார்.
உரோம் நகரில் இயேசு பையினர் கீழ் இருக்கும் இயேசு கோவிலில் திருத்தந்தையின் உடல் நலத்திற்காக திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய பேராயர், உலகம் முழுவதும் திருத்தந்தைக்காக இறைவேண்டல் நிகழ்த்தி வருவது குறித்து தான் நன்றியுரைப்பதாகவும் தெரிவித்தார்.
இத்தவக்காலத்தில் இறையிரக்கத்திலிருந்து வெளிப்படும் இறையன்பு குறித்து தன் மறையுரையை வழங்கிய பேராயர், நம்பிக்கை, விடுதலை மற்றும் அமைதியைத் திறக்கும் புதிய ஆன்மீக மறுபிறப்புக்கு வழிவகுக்கும் இறையன்பிற்கு நம்மைத் திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆன்மீக மறுபிறப்பை நோக்கிய பாதையில் பல்வேறு தடைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர் காலகர், ஒளியின் மீது இருள் வெற்றிகொள்வதுபோல் தெரியும் இன்றைய போர்களான, உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ராயேல், இலபனோன், மியான்மார், சூடான், காங்கோ குடியரசு, மற்றும் ஏனைய இடங்களின் மோதல்களையும் சுட்டிக்காட்டினார்.
பொதுநலனுக்காக உழைக்க வேண்டியது, நீதி மற்றும் அமைதிக்காக அர்ப்பணிக்க வேண்டியது போன்றவை இன்றைய காலத்தின் தேவை என்பதையும் எடுத்தியம்பினார் பேராயர் காலகர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்