MAP

இலங்கையின் கோவில் ஒன்றில் இலங்கையின் கோவில் ஒன்றில்  (ANSA)

கத்தோலிக்கப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது

உலக கத்தோலிக்கர்களுள் 20 விழுக்காட்டினர் ஆப்ரிக்காவிலும், 47.8 விழுக்காட்டினர் அமெரிக்கக் கண்டத்திலும், 20.4 விழுக்காட்டினர் ஐரோப்பாவிலும், 11 விழுக்காட்டினர் ஆசியாவிலும் வாழ்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 1.15 விழுக்காடு அதிகரித்திருந்ததாகவும், அதேவேளையில் மேய்ப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அண்மையில் வெளியிடப்பட்ட 2025ன் திருப்பீட ஆண்டு புத்தகம் தெரிவிக்கிறது.

கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை உலக அளவில் 2022ஆம் ஆண்டில் 139 கோடியாக இருந்தது 2023ஆம் ஆண்டில் 140 கோடியே 60 இலட்சமாக உயர்ந்துள்ளதாக கூறும், திருஅவை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடும் திருப்பீட ஆண்டு புத்தகம், ஒவ்வொரு கண்டத்திலும் வாழும் கத்தோலிக்கர்கள் குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

2022 மற்றும் 2023 ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை வெளியிடும் இந்த ஏடு,  உலக கத்தோலிக்கர்களுள் 20 விழுக்காட்டினர் ஆப்ரிக்காவில் வாழ்வதாகவும், காங்கோ குடியரசு, நைஜீரியா, உகாண்டா, டன்சானியா, கென்யா போன்றவை ஆப்ரிக்காவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளாகவும் தெரிவிக்கிறது.

உலகின் கத்தோலிக்கர்களுள் 47.8 விழுக்காடு, அதாவது ஏறக்குறைய பாதி கத்தோலிக்கர்கள் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்வதாகவும், இதில் 27.4 விழுக்காட்டினர் தென் அமெரிக்காவிலும், 6.6 விழுக்காட்டினர் வட அமெரிக்காவிலும், 13.8 விழுக்காட்டினர் மத்திய அமெரிக்காவிலும் வாழ்வதாகத் தெரிவிக்கிறது.

உலக கத்தோலிக்கர்களுள் ஏறக்குறைய 11 விழுக்காட்டினரே ஆசியாவில் வாழ்கின்றனர் எனவும், பிலிப்பீன்ஸில் 9 கோடியே 30 இலட்சம் கத்தோலிக்கர்களும் இந்தியாவில் 2 கோடியே 30 இலட்சம் கத்தோலிக்கர்களும் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியக் கண்டத்தில் உலக கத்தோலிக்கர்களில் 20.4 விழுக்காட்டினர் வாழ்வதாகவும் இத்தாலி, போலந்து, இஸ்பெயின் போன்ற நாடுகளே கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையில் ஐரோப்பாவில் முன்னணியில் இருப்பதாகவும் இவ்வேட்டில் கூறப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஓசியானியா பகுதியில் 1கோடியே 10 இலட்சம் கத்தோலிக்கர் வாழ்கின்றனர்.

2023ஆம் ஆண்டில் உலகில் 4 இலடசத்து ஆறாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு (406,996) அருள்பணியாளர்கள் இருந்ததாகவும், இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 734 குறைவு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த அருள்பணியாளர்களுள் 38.1 விழுக்காட்டினர் ஐரோப்பாவில் இருப்பதாகவும், 29.1 விழுக்காட்டினர் அமெரிக்க கண்டத்தில் இருப்பதாகவும், 18.2 விழுக்காட்டினர் ஆசியாவிலும், 13.5 விழுக்காட்டினர் ஆப்ரிக்காவிலும், 1.1 விழுக்காட்டினர் ஓசியானிவிலும் இருப்பதாக இவ்வேட்டில் கூறப்பட்டுள்ளது.

உலகில் துறவு சபைகளைச் சேர்ந்த அருள்கன்னியர்களின் எண்ணிக்கையும் 2022ஆம் ஆண்டில் ஐந்து இலட்சத்து 99 ஆயிரத்து 228 ஆக இருந்தது ஏறக்குறைய 1.6 விழுக்காடு குறைந்து 2023ஆம் ஆண்டில் ஐந்து இலட்சத்து 89 ஆயிரத்து 423 ஆக குறைந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 மார்ச் 2025, 11:57