திருத்தந்தையின் உடல் நலனுக்காக வேண்டுவதில் உறுதியாக இருப்போம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருஅவையின் அன்னையாம் மரியாவுடன் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலனுக்காக வேண்டுவதில் உறுதியாக இருப்போம் என அனைத்து விசுவாசிகளுக்கும் அழைப்பு விடுத்தார் கர்தினால் Robert Prevost.
திருத்தந்தையின் உடல் நலனுக்காக உரோம் நகர் புனித பேதுரு பேராலய வளாகத்தில் ஒவ்வொரு முன்னிரவும் என கடந்த எட்டு நாட்களாக இடம்பெற்றுவரும் ஜெபமாலை செபித்தலை மார்ச் 3, திங்கள் முன்னிரவில் வழி நடத்திய ஆயர்களுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Prevost அவர்கள், அனைவருக்கும் ஆறுதலையும் நம்பிக்கையையும் தரும் அன்னை மரியா நமக்கும் நம்பிக்கை மற்றும் ஆறுதலின் அடையாளமாக இருப்பார் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
புனித பேதுரு பெருங்கோவிலை நோக்கிச் செல்லும் படிகளை நோக்கியவாறு அப்பெருங்கோவில் முன்பகுதியில் வைக்கப்பட்ட ‘திருஅவையின் அன்னை’ திருவுருவத்தின் முன் ஒவ்வொரு நாளும் இரவு உள்ளூர் நேரம் 9 மணிக்கு திருத்தந்தையின் உடல் நலத்திற்காக ஜெபமாலை செபிக்கப்படுகிறது.
கடந்த எட்டு நாட்களைப் போலவே, திங்கள் இரவும் ஏராளமான கர்தினால்கள், ஆயர்கள், துறவறத்தார், அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் ஜெபமாலை ஜெபித்தலில் கலந்துகொண்டு திருத்தந்தைக்காக செபித்தனர்.
ஜெபமாலையின் இறுதியில் இறைவனை நோக்கி செபித்த கர்தினால் Prevost அவர்கள், தூய ஆவி அனுப்பப்படுமாறும், அவர் நம் பலவீனங்களில் செயலாற்றி, நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி நாம் அன்பில் வளரவும் நம்பிக்கையில் நடைபோடவும் உதவுவாராக எனவும் வேண்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்