MAP

கர்தினால் பரோலின் கர்தினால் பரோலின்  (ANSA)

கலந்துரையாடலை ஊக்குவிப்பவர்களாக ஐரோப்பிய ஆயர்கள் செயல்பட....

கர்தினால் பரோலின் : சவால்கள் நிறைந்துவரும் இன்றைய காலக்கட்டத்தில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகளுக்காக அர்ப்பணிப்பதோடு, கிறிஸ்தவப் பாரம்பரியக் கடமையை உணர்ந்து செயல்படவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆயர்கள் அமைதி, கலந்துரையாடல் மற்றும் ஒன்றிப்பை ஊக்குவிப்பவர்களாக செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகள் அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், உலகில் சவால்கள் நிறைந்துவரும் இன்றைய காலக்கட்டத்தில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகளுக்காக நம்மை அர்ப்பணிப்பதோடு, நமக்கிருக்கும் கிறிஸ்தவப் பாரம்பரியக் கடமையை உணர்ந்து செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

முரண்பாடுகளுக்குத் தீர்வுகாண திருப்பீடம் எப்போதும், அரசியல் உறவுகளை வளர்க்கும் அர்ப்பணத்தின் வழியாக செயல்படுவதையும் சுட்டிக்காட்டிய கர்தினால், அரசியல் தலைவர்களும் தங்களிடையே பிரிவினைகளையும் கொள்கை தடுப்புச் சுவர்களையும் களைந்து உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.  

இன்றைய உடைபட்ட உலகில் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் ஊறிப்போன ஐரோப்பாவுக்கு இருக்கும், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் நம்பிக்கையாகச் செயல்பட வேண்டிய பொறுப்புணர்வையும் ஆயர்களிடம் சுட்டிக்காட்டினார் கர்தினால் பரோலின்.

நாடுகளுக்கிடையேயான பதட்ட நிலைகள், பொருளாதார நிலையற்ற தன்மைகள் மற்றும் குடியேற்ற பிரச்சனைகள் என ஐரோப்பாவை நெருக்கும் சவால்களால் நாடுகள் தவறான பாதையான பிரிவினைகளை கையிலெடுத்து விடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருப்பீடச் செயலர்.

சமூகப் பொருளாதார சரிநிகரற்ற நிலைகளுக்கு தீர்வுகாண ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்திய கர்தினால், சமூக பொருளாதார அமைப்புமுறைகளின் மையமாக மனித மாண்பு இருக்க வேண்டும் என்பதை ஆயர்களிடம் எடுத்தியம்பினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மார்ச் 2025, 15:06