MAP

கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

மனிதாபிமானச் சட்டங்கள் திட்டமிட்டு மீறப்படுவதாக கர்தினால் கவலை

கர்தினால் பரோலின் : காசா பகுதியின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, வன்முறைத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, கலந்துரையாடலுக்கும் அமைதிக்குமான வழிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பொதுமக்கள் மீது குண்டு வீசுவது, மற்றும் நிவாரணப் பணியாளர்களைக் கொல்வது என அனைத்துலகச் சட்டங்கள் திட்டமிட்டு மீறப்படுவதாக தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்கள் திட்டமிட்டு மீறப்படுவதாக திருப்பீடம் ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாக தன் கவலையை வெளியிட்ட திருப்பீடச் செயலர், குறிப்பாக காசா பகுதியில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகளை இதற்கு உதாரணமாக எடுத்தியம்பினார்.

காசா பகுதியின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, வன்முறைத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, கலந்துரையாடலுக்கும் அமைதிக்குமான வழிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற திருத்தந்தையின் அழைப்பையும் எடுத்தியம்பிய கர்தினால் பரோலின் அவர்கள்,  பொதுமக்கள் தாக்கப்படுவது, மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்படுவது போன்றவை பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிராகச் செல்பவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தான் செஞ்சிலுவைச் சங்கத்திடம் பேசியதாகவும், தாக்குதல்களால் அவர்களின் பணியும் தடைப்பட்டிருப்பதாகவும் கூறினார் திருப்பீடச் செயலர்.

இன்றைய காலத்தின் மிகப்பெரும் குறைபாடு, மனிதாபிமானச் சட்டங்கள் மதிக்கப்படாமலிருப்பதே என்ற கவலையையும் வெளியிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என, உடல்நலமுற்றிருந்தபோதுகூட திருத்தந்தை குரல் எழுப்பியதையும் எடுத்துரைத்தார்.

38 நாட்கள் சிகிச்சை பெற்று உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்து வத்திக்கான் திரும்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில முக்கியப் பணிகளைக் கவனிப்பதை தவிர, அவர் ஓய்வில் சிறிது காலம் இருப்பதையே மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் எடுத்தியம்பினார்.

திருத்தந்தை பூரண குணமடையும் வரை, அவரை வருத்தாமல், முக்கிய முடிவுகள் எடுப்பது மட்டுமே அவர் வசம் ஒப்படைக்கப்படும் எனவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிலகாலம் அவர் ஓய்வில் இருப்பார் எனவும் கர்தினால் பரோலின் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மார்ச் 2025, 14:39