அமைதிக்கான ஒரே வழி மற்றவரை மதித்தலேயாகும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
புனித பூமியின் கிறிஸ்தவர்களுக்கு நம் உதவிகள் பெருமளவில் தேவைப்படுவதால் உலகின் அனைத்து நாடுகளும் அமைதி நோக்கிய பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் Claudio Gugerotti.
புனித பூமிக்கென அனைத்து தலத்திருஅவைகளிலும் புனித வெள்ளியன்று நிதி திரட்டல் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த அழைப்பை விடுத்துள்ள, கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் குகரோத்தி அவர்கள், புனித பூமியில் இடம்பெறும் வன்முறை மற்றும் மோதல்களால் அழுகையும், ஏமாற்றமும், அழிவுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றன என மேலும் தெரிவித்துள்ளார்.
புனித பூமியின் இன்றைய நிலைகள் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு நேர்முகம் ஒன்றை வழங்கிய கர்தினால் குகரோத்தி அவர்கள், புனித பூமியின் அமைதிக்காக பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பது சிரமமாகத் தெரிந்தாலும், அது ஒன்றே மக்களின் உயிர்களைக் காப்பதற்கான வழி, மற்றும், அமைதிக்கான ஒரே வழி மற்றவரை மதித்தலேயாகும் எனவும் எடுத்துரைத்தார்.
இராணுவ பலம் மூலம் அமைதியைக் கொணரமுடியாது, ஏனெனில் அது ஒரு சிலரின் சுயநலத்திற்கே உதவும் என்ற கர்தினால், காசா, வெஸ்ட் பேங்க், சிரியா, இலபனோன், உக்ரைன், ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
புனித பூமியில் இடம்பெறும் வன்முறைகள் குறித்த புகைப்படங்கள் நம் தூக்கத்தை இழக்க வைக்கின்றன, ஏனெனில் அங்கு இடம்பெறுவன மனிதாபிமானமற்ற செயல்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் குகரோத்தி.
கிறிஸ்தவர்கள் புனித பூமியில் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கு நாம் உதவ வேண்டிய தேவையையும் வலியுறுத்திய கர்தினால், நல்ல சிறப்பான வருங்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் உழைப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்