MAP

யூபிலிக் கொண்டாட்டம் யூபிலிக் கொண்டாட்டம் 

சனி, ஞாயிறு தினங்களில் தன்னார்வத் தொண்டர்களின் யூபிலி

அரசு சாரா தொண்டு அமைப்புக்கள், மற்றும் தன்னார்வப் பணியாளர் அமைப்புக்களின் யூபிலிக் கொண்டாட்டத்தில் 25,000 திருப்பயணிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அரசு சாரா தொண்டு அமைப்புக்களும், தன்னார்வப் பணியாளர் அமைப்புக்களும் கலந்துகொள்ளும் யூபிலிக் கொண்டாட்டம் இவ்வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் உரோம் நகரில் இடம்பெற உள்ளது.

யூபிலிக் கொண்டாட்டத்தின் ஐந்தாவது முக்கிய நிகழ்வாக இடம்பெறும் இதில் 25,000 திருப்பயணிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து கண்டங்களில் இருந்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள் புனித பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவு வழியாக செல்வதுடன் சனிக்கிழமை முழுவதும் உரோம் நகரின் பல்வேறு இடங்களில் கலந்துரையாடல்களில் கலந்து கொள்வர்.

ஞாயிறன்று ஒருங்கிணைந்த மனித குல வளர்ச்சிக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மைக்கல் செர்னி அவர்கள், திருத்தந்தையின் சார்பில் திருப்பலி நிறைவேற்றுவதோடு, திருத்தந்தை இத்திருப்பலிக்கென தயாரித்து வைத்திருந்த மறையுரையையும் வாசிப்பார்.

100 நாடுகளில் இருந்து கலந்துகொள்ளும் 25,000க்கும் மேற்பட்ட திருப்பயணிகளுள் 15, 000 பேர் இத்தாலியில் இருந்து கலந்துகொள்வர் எனவும், 124 பேர் இஸ்பெயினிலிருந்தும், 123 பேர் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்தும், 85 பேர் பிரேசில் நாட்டிலிருந்தும் கலந்துகொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர போலந்து, அர்ஜெண்டினா, மெக்ஸிகோ, கொலம்பியா, ஆஸ்திரேலியா, சிலே, ஈக்குவதோர், மற்றும் இந்தியாவிலிருந்தும் தன்னார்வத் தொண்டர் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 மார்ச் 2025, 12:49