MAP

உக்ரைன் நாட்டுக் கொடி உக்ரைன் நாட்டுக் கொடி  (AFP or licensors)

இரஷ்யா – உக்ரைன் போரின் மூன்றாமாண்டு நிறைவு

கடுமையான குளிரினாலும் வன்முறையினாலும் ஏறக்குறைய 40 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

நீடித்த நிலையான அமைதி என்பது சமத்துவம், மரியாதை, நிலைத்தத் தன்மை ஆகியவற்றின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும், உக்ரைனின் மூன்றாண்டு கால போர்ச்சூழலில் ஐரோப்பா அமைதிக்கான நபராக விளங்கவேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் மாசிமிலியானோ மெனிகெத்தி

பிப்ரவரி 24, திங்கள்கிழமை இரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பமாகி மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு வத்திக்கான் செய்திகள் பக்கத்தில் தலையங்க செய்தி ஒன்றினை வெளியிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் வத்திக்கான் செய்திகளுக்கான இணைஇயக்குநர் மாசிமிலியானோ மெனிகெத்தி.

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24,  அன்று இரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததால் போர் மீண்டும் ஐரோப்பாவின் மையப்பகுதிக்குத் திரும்பியது என்று எடுத்துரைத்த மெனிகெத்தி அவர்கள், மரணம், அச்சம் மற்றும் துன்பத்தால் பாதிக்கப்பட்ட இதயங்களைக் கொண்ட இலட்சக் கணக்கான மக்களின் மிகவும் கடினமான மூன்று ஆண்டுகள் இது என்றும்,  இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புக்கள் குறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை எதுவும் இல்லை என்றும் எடுத்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் செய்தித் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள செய்தி நிறுவனங்கள் ஏறக்குறைய 70 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளனர் என்றும், தங்களது சொந்த நாட்டையும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மற்ற பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

கடுமையான குளிரினாலும் வன்முறையினாலும் ஏறக்குறைய 40 இல்டசம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், ட்ரோன் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க பதுங்கு குழிகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வாழ்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ள மெனிகெத்தி அவர்கள், குளிர் மற்றும்  வன்முறையினாலும், மின்சாரம், உணவு, நலவாழ்வு இன்மையினாலும் பாதிக்கப்படும் மக்கள், நீடித்த நிலையான அமைதிக்காக காத்திருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் பாதை அனைவருக்கும் ஓர் உறுதிப்பாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய மெனிகெத்தி அவர்கள், நாடுகள், வெடிகுண்டுகள் மற்றும் போர் இயந்திரங்களை நிறுத்துவது மட்டுமல்லாமல், செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வதும் போரிலிருந்து பின்வாங்க துணிவு கொண்டிருப்பதும், மிக அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

பாதிக்கப்படும் மக்களின் முகத்தைப் பார்த்தல், அனைத்து தரப்பினருக்கும் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் ஒரு அமைப்பை உருவாக்குதல் மற்றும் நிலைநிறுத்துதல் மிக அவசியம் என்று சுட்டிகாட்டியுள்ள மெனிகெத்தி அவர்கள், அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஒன்றாக மீண்டும் தொடங்குவது மிக அடிப்படையானது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

எப்போதும் தோல்வியைத் தரும் போர் மனிதகுலத்திற்கு அழிவையும் அவமானத்தையும் ஏற்படுத்துகின்றது என்று திருத்தந்தையும் வலியுறுத்துவதாக எடுத்துரைத்த மெனிகெத்தி அவர்கள், 1975 ஆம் ஆண்டில், அமைதிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நாட்டில் ஏற்பட்டப் பதட்டங்களைக் குறைக்கவும், உரையாடலில் ஈடுபட்டு உதவியது போல ஐரோப்பா தன்னை மீண்டும் கண்டறியவேண்டும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 பிப்ரவரி 2025, 13:59