அணு ஆயுதங்கள் இருத்தலுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“அதிக அளவிலான இராணுவச் செலவினங்கள், சட்டப்பூர்வமான பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையானதை விட அதிகமாகச் செல்கின்றன என்றும், வறுமை ஒழிப்பு, நீதி, கல்வி, நலப் பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து முக்கிய வளங்களைத் திசைதிருப்பும் ஒரு தீர்ந்துபோகும் ஆயுதப் போட்டியின் தீய வட்டத்தைத் தூண்டுகிறது" என்று கூறினார் பேராயர் காலகர்.
ஜெனிவாவில் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதிவரை இடம்பெற்றுவரும் ஐ.நா.வின் ஆயுதக்குறைப்புக்கான உயர்மட்ட மாநாட்டில் உரையாற்றியபோது இவ்வாறு கூறிய பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், அதிகப்படியான இராணுவச் செலவினங்களின் எதிர்மறையான தாக்கங்களைப் பற்றியும் வலியுறுத்தினார்.
இத்தகைய அதிகபடியான இராணுவச் செலவினங்கள் ஆயுதப் போட்டியைத் தூண்டிவிடுகின்றன என்றும், வறுமை, கல்வி மற்றும் உடல்நலம் போன்ற முக்கியமான பகுதிகளிலிருந்து வளங்களை திசை திருப்புகின்றன என்றும் எச்சரித்தார் பேராயர் காலகர்.
முழுமையான ஆயுதக்குறைப்புக்காக நாடுகளை ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்ட பேராயர், அவ்வாறு செய்யத் தவறினால் மோதல்கள், சமத்துவமின்மை மற்றும் சுற்றுச்சூழல் தீங்குகள் நீடித்து, ஆயுதத் வர்த்தகத்திற்கு மட்டுமே பயனளிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஆயுதக்குறைப்புக்குத் தடையாய் இருப்பவைக் குறித்தும் தனது உரையில் விமர்சித்தப் பேராயர், அணு ஆயுதங்கள் மீதான இராணுவச் செலவினங்களைக் குறைக்கவும், அவற்றை உலகளாவிய அமைதி முயற்சிகளில் முதலீடு செய்யவும் அவசர நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன் தனது உரையில், செயற்கை நுண்ணறிவின் ஆயுதமாக்கல் குறித்த கவலைகளை எழுப்பிய பேராயர், குறிப்பாக, தன்னியக்க ஆயுதங்கள், மனித ஒழுக்கம் சார்ந்த தீர்ப்பு இல்லாத மற்றும் கடுமையான நெறிமுறை சிக்கல்களை முன்வைக்கின்றன என்றும் எடுத்துக்காட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்