திருத்தந்தை உடல்நலம் பற்றிய தேவையற்ற ஊகம் பயனற்றது - கர்தினால் பரோலின்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தையின் உடல்நலம் குறித்தும், அவரது பணித்துறப்பு பற்றியும், தவறான ஊகம் எதுவும் தேவையில்லை என்றும், திருத்தந்தை அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று வத்திக்கான் திரும்புவது ஒன்று மட்டுமே தற்போது மிக முக்கியம் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
அண்மையில் மேற்கு ஆப்ரிக்காவின் புர்கினோ பாசோ பகுதிக்குச் சென்று வத்திக்கான் திரும்பியுள்ள திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Corriere della Sera என்னும் இத்தாலிய நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் குறித்த தவறான கருத்துக்கள் மற்றும் தேவையற்ற ஊகங்கள் அனைத்து பயனற்றவை என்று எடுத்துரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், கட்டுப்பாடற்ற வதந்திகள் பரவுவது அல்லது சில பொருத்தமற்ற கருத்துகள் கூறப்படுவது மிகவும் சாதாரணமானது, இதுபோன்ற தேவையற்ற செய்திகள் பரவுவது முதன்முறை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்படின் திருத்தந்தை அவர்களை மருத்துவமனையில் சென்று சந்திக்க, தான் தயாராக இருப்பதாக எடுத்துரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இதுவரை அதற்கான தேவை எதுவும் ஏற்படவில்லை என்றும், திருத்தந்தை மருத்துவமனையில் தனிப்பட்ட சந்திப்புக்களைத் தவிர்த்து, ஓய்வெடுத்து மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதே இப்போதைக்கு நல்லது என்றும் கூறியுள்ளார்.
ஜெமெல்லி மருத்துவமனை மருத்துவர்களிடமிருந்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலம் குறித்த நேர்மறையான செய்திகள், திருத்தந்தை குணமடைந்து வருகிறார் என்பதை எடுத்துரைத்து ஊக்கமளிக்கின்றன என்றும், அலுவலக ரீதியாக அவருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது அவர், உடல்நலத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்