MAP

பாத்திமா அன்னை திருவுருவம் பாத்திமா அன்னை திருவுருவம்  (AFP or licensors)

அக்டோபர் 11-12ல் பாத்திமா அன்னை மரியா திருவுருவம் உரோமில்

1917ல் அன்னை மரியாவைக் கண்ட மூன்று சிறார்கள் வர்ணித்தபடி 1920ஆம் ஆண்டு போர்த்துக்கல் சிற்பி José Ferreira Thedim என்பவர் உருவாக்கியதே பாத்திமா அன்னை மரியாவின் திருவுருவச் சிலையாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களால் வணக்க மரியாதை செய்யப்படும் புனித பாத்திமா அன்னை மரியா திருஉருவம் பாத்திமா நகரிலிருந்து உரோம் நகருக்கு யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யூபிலி ஆண்டின் ஒரு பகுதியாக அக்டோபர் 11 மற்றும் 12 தேதிகளில் உரோம் நகரில் சிறப்பிக்கப்படும் மரியன்னை ஆன்மீக யூபிலிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக போர்த்துக்கல்லின் பாத்திமா நகர் கோவிலில் உள்ள மூலமுதலான பாத்திமா அன்னை திருவுருவம் அந்நாட்களில் உரோம் நகருக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

மரியன்னை ஆன்மீக யூபிலிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உரோம் நகர் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிறைவேற்றப்படும் திருப்பலியில் பாத்திமா அன்னை மரியா திருவுருவம் வைக்கப்பட்டு, செபத்தையும் தியானமுறைகளையும் மேலும் வளப்படுத்துவதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திருப்பலியில் பங்கேற்பதற்கான அனுமதி ஏனைய திருப்பலி மற்றும் புதன் பொதுமறைபோதகம் போல் முற்றிலும் இலவசமானது எனவும், ஆனால், இதில் பங்குகொள்ள விரும்புவோர் தங்கள் பெயரை இணையதளம் வழியாக பதிவுச் செய்து விண்ணப்பிப்பது அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 1984, 2000 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் பாத்திமா அன்னையின் புகழ்மிக்க திருவுருவம் உரோம் நகருக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

1917ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் அக்டோபருக்கும் இடைப்பட்டக் காலத்தில் பாத்திமா நகரில் ஆறுமுறை அன்னை மரியாவை நேரடியாகக் கண்ட மூன்று சிறார்கள் வர்ணித்தபடி 1920ஆம் ஆண்டு போர்த்துக்கல் சிற்பி José Ferreira Thedim என்பவர் உருவாக்கியதே அன்னை மரியாவின் இத்திருவுருவச் சிலையாகும்.

1946ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி இவ்வன்னை மரியாவுக்கு சூட்டப்பட்ட மகுடத்தில், 1981ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி சுடப்பட்ட திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுலின் உடலிலிருந்து அகற்றப்பட்ட ஒரு துப்பாக்கிக் குண்டும் பின்னர் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 பிப்ரவரி 2025, 11:16