MAP

கிறிஸ்தவ ஒன்றிப்பின் அவசியம் கிறிஸ்தவ ஒன்றிப்பின் அவசியம் 

WCC அவை மற்றும் கத்தோலிக்க திருஅவையின் கூட்டு ஆண்டறிக்கை

WCC அவைக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான திருப்பீட அவைக்கும் இடையே ஒத்துழைப்பு துவக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவு 2027ஆம் ஆண்டு இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

WCC எனப்படும் கிறிஸ்தவ சபைகளின் அவையும் கத்தோலிக்க திருஅவையும் இதுவரை எடுத்து வந்துள்ள ஒன்றிணந்த பணிகள் குறித்தும், வருங்கால ஒன்றிணந்த திட்டங்கள் குறித்தும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன இவ்விரு கிறிஸ்தவ சபைகளும்.

இம்மாதம் 17 முதல் 20 வரை திருப்பீடத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான துறையில் இவ்விரு தரப்பினரும் இணைந்து நடத்தியக் கூட்டத்தின் முடிவாக வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், WCC  அவைக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான திருப்பீட அவைக்கும் இடையே ஒத்துழைப்பு துவக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவு 2027ஆம் ஆண்டு இடம்பெறுவது தொடர்புடைய கொண்டாட்டம் குறித்தும் இவர்களின் வருங்காலத் திட்டங்களில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WCC அவைக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான திருப்பீட அவைக்கும் இடையே 1977ல் துவக்கப்பட்ட ஒத்துழைப்பின் வழியாக 1994ல் மதங்களிடையேயான செபம், 1997ல் பிற மத நம்பிக்கையாளர்களிடையே திருமணம் குறித்த சிந்தனைகள், 2011ல் பல மதங்கள் கொண்ட உலகில் கிறிஸ்தவ சான்று, 2019ல் அமைதிக்கான கல்வி, 2020 கோவிட் காலத்தின்போது, காயப்பட்ட உலகிற்கு மதங்களிடையேயான ஒருமைப்பாட்டின் வழி பணி செய்தல் போன்ற ஏடுகள் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளன.

பிரிவினைகளை குணப்படுத்தவும், உடன்பிறந்த உணர்வை ஊக்குவிக்கவும், அமைதி மற்றும் ஒப்புரவை பண்படுத்தி வளர்க்கவும் மதங்கள் ஆற்றவேண்டிய பங்களிப்பை அண்மைக் கூட்டத்தில் WCC கிறிஸ்தவ அவையும் திருப்பீடத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான துறையும் வலியுறுத்தியதாகவும் அவர்களின் அறிக்கை எடுத்துரைக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 பிப்ரவரி 2025, 14:44