MAP

பேராயர் பால் ரிச்சர்டு காலகர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்  (ANSA)

மனித மாண்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்! : பேராயர் காலகர்

ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 58-வது அமர்வில், மரண தண்டனை, உலகளாவிய கடன் நீதி மற்றும் இன்றைய புவிசார் அரசியல் சூழலில் மனித உரிமைகளுக்கான சவால்கள் உள்ளிட்ட மூன்று முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார் பேராயர் காலகர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“ஒரு நாட்டின் மக்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில், அவர்களிடம் பணம் கேட்பது அல்லது எதிர்பார்ப்பது சரியல்ல” என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்தை மேற்கோள்காட்டியுள்ளார் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

பிப்ரவரி 25, இச்செவ்வாயன்று, ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 58-வது அமர்வில், மரண தண்டனை, உலகளாவிய கடன் நீதி மற்றும் இன்றைய புவிசார் அரசியல் சூழலில் மனித உரிமைகளுக்கான சவால்கள் உள்ளிட்ட மூன்று முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் பேராயர் காலகர்.

01. மரண தண்டனை

மனித மாண்பை மீறுவதால், மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற திருப்பீடத்தின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியப் பேராயர், நவீன நீதி அமைப்புகள் மரண தண்டனையை நாடாமல் சமூகத்தைப் பாதுகாக்க முடியும் என்று வலியுறுத்தியதுடன், இது மீட்புக்கான சாத்தியத்தைத் தடுக்கிறது என்தையும் எடுத்துக்காட்டினார்.

02. உலகளாவிய கடன் நீதி

வளரும் நாடுகள் மீதான கடனின் சுமைகளைப் பற்றி தனது உரையில் விவாதித்தப் பேராயர், உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி பேர் அத்தியாவசிய சேவைகளை விட கடன் சேவைக்காக அதிகம் செலவிடப்படும் நாடுகளில் வாழ்கின்றனர் என்பதையும் எடுத்துக்காட்டினார்.

உலகளாவிய கடனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும், சுற்றுச்சூழல் கடனையும் குறிப்பிட்ட பேராயர் காலகர் அவர்கள், அங்குச் செல்வச்செழிப்புள்ள நாடுகள் ஏழை நாடுகளிலிருந்து வளங்களைச் சுரண்டுகின்றன என்று சுட்டிக்காட்டியதுடன், கடன் நிவாரணம் மற்றும் ஊதியத்தை விட மனித மாண்பிற்கு முன்னுரிமை அளிக்கும் நீதியான நிதி அமைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மனித உரிமைகள் மற்றும் மனித மாண்பு

மரண தண்டனை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்குப் போதிய ஆதரவின்மை போன்ற மனித மாண்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கண்டித்ததுடன், வாழ்வதற்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் தனது உரையில் வலியுறுத்தினார் பேராயர் காலகர்.

இடம்பெயர்த்தோரையும் புலம்பெயர்ந்தோரையும் சுமைகளாகக் கருதாமல் அவர்களை மனித மாண்புடன்  நடத்த வேண்டும் என்று விண்ணப்பித்து அவர்களுக்கு ஆதரவாகப் பரிந்துபேசிய பேராயர், பெண்களின் செயல்களைப் பாராட்டுவது மற்றும் அவர்களின் பங்களிப்புகளை ஆதரிக்கும் கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இறுதியாக, கடன் தள்ளுபடி மற்றும் மனித மாண்பு, சமத்துவம் மற்றும் ஒன்றிப்பை மையமாகக் கொண்ட புதிய அனைத்துலக நிதி அமைப்பு உள்ளிட்ட உலகளாவிய கொள்கைகளில் முறையான மாற்றத்தை வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார் பேராயர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 பிப்ரவரி 2025, 14:22