திருத்தந்தைக்காகச் செபிக்கும் கடமையை நாம் கொண்டுள்ளோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
புனித பேதுரு சிறையில் இருந்தபோது திருஅவை ஒன்றிணைந்து செபித்ததை நாம் திருத்தூதர்பணி நூலில் நோக்கும் அதேவேளை, கடந்த கால வரலாற்றில் எப்போதெல்லாம் திருத்தந்தையர்கள் உடல் நலமற்று இருந்தபோதும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருந்தபோதும் அவர்களுக்காக திருஅவை ஒன்றிணந்து செபிப்பதை கண்டு வருகிறோம் எனக் கூறினார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.
மருத்துவமனையிலிருக்கும் திருத்தந்தையின் உடல் நலத்திற்காக கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகளுடன் இணைந்து உரோம் புனித பேதுரு பேராலய வளாகத்தில் ஜெபமாலை செபித்த கர்தினால் பரோலின் அவர்கள், தனியார்கள், கிறிஸ்தவ சமூகங்கள் என உலகம் முழுவதும் திருத்தந்தைக்காக இறைவனை நோக்கி இறைவேண்டல் எழுப்புவதைக் காணமுடிகின்றது என கூறினார்.
திருத்தந்தை விரைவில் நலம்பெற வேண்டும் என அன்னை மரியின் பரிந்துரையை வேண்டி நாம் அனைவரும் இன்று முதல் ஒன்றிணைந்து செபிப்போம் என கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்த திருப்பீடச் செயலர், Salus Infirmorum, அதாவது நோயுற்றோரின் நலன் என்ற பெயரைத் தாங்கியிருக்கும் அன்னை மரியா திருத்தந்தையை நலமுடன் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலத்திற்காக பிப்ரவரி 24, திங்கள்கிழமை உரோம் நேரம் இரவு 9 மணியளவில், இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 1,30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சிறப்பு செபமாலை வழிபாட்டில் கர்தினால் பரோலின் அவர்களுடன் கலந்துகொண்ட பல கர்தினால்களுள் ஒருவரான கர்தினால் Lazzaro You Heung-sik உரைக்கையில், நாம் ஒவ்வொருவரும் திருத்தந்தைக்காகச் செபிக்கும் கடமையைக் கொண்டுள்ளோம், அதேவேளை, அவர் விரும்பும் செயல்களையும் நாம் ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வார்த்தையை வாழ்ந்து காட்டுதல், நம் இதயங்களை மற்றவர்களுக்குத் திறத்தல், மற்றவரை, அதாவது எளியோரை, புலம்பெயர்ந்தோரை, வறுமைக்கோட்டிற்கு தள்ளப்பட்டோரை, ஏழைகளை நாம் இயேசுவைப் போல் அன்புகூர்வது, ஆகியவை திருத்தந்தையின் இதயத்திற்கு நெருக்கமானவை என்றார் கர்தினால் Lazzaro You.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்