விபூதிப் புதன் வழிபாட்டில் திருத்தந்தையின் சார்பில் கர்தினால்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதால் அவரின் பிரதிநிதியாக இவ்வாண்டு உரோம் நகரின் அவெந்தினே குன்றில் இடம்பெறும் விபூதிப் புதன் வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கர்தினால் Angelo De Donatis அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் பிரதிநிதியாக இவ்வழிபாட்டுச் சடங்கில் தலைமையேற்க திருத்தந்தையால் நியமிக்கப்பட்டிருக்கும் கர்தினால் De Donatis அவர்கள், இறைவனுடன் ஒப்புரவுக்கு விசுவாசிகளுக்கு உதவும் திருஅவையின் அக நீதிமன்றத்தில் (Apostolic Penitentiary) முதன்மை ஒப்புரவாளராகச் செயல்பட்டுவருகின்றார்.
மார்ச் மாதம் 5ஆம் தேதி உரோம் நகரின் அவெந்தினே குன்றில் உள்ள புனித ஆன்சலம் கோவிலில் மாலை 4.30 மணிக்குத் துவங்கும் வழிபாடு, பின்னர் ஊர்வலமாக அக்குன்றில் உள்ள புனித சபினா கோவில் நோக்கிச் செல்லும்.
திருத்தந்தையின் வழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான தலைவர் பேராயர் ஜொவான்னி தியேகோ ரவெல்லி அவர்களால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில், இந்த வழிபாட்டில் கர்தினால்கள், ஆயர்கள், புனித ஆன்சல்மின் பெனடிக்டைன் துறவியர், புனித சபீனாவின் தொமினிக்கன் துறவியர் மற்றும் விசுவாசிகளும் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் திருத்தந்தையின் தலைமையில் உரோம் நகர் அவெந்தினே குன்றில் இடம்பெறும் இந்த விபூதிப் புதன் வழிபாட்டு பாரம்பரியமானது, திருத்தந்தை புனித 23ஆம் ஜான் அவர்களால் மீண்டும் நடைமுறைக்குக் கொணரப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்