திருத்தந்தையின் உடல் நலத்திற்காக சிறப்பு செபமாலை
மெரினா ராஜ் – வத்திக்கான்
உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, எல்லாம் வல்ல இறைவன், நம்பிக்கையில் உறுதிப்படுத்தவும், திருஅவை மற்றும் முழு உலகத்திற்குமான பணிக்கு அவர் மீண்டும் திரும்பி வரவும் செபிப்போம் என்றும், திருத்தந்தைக்காக ஒப்புக்கொடுத்து செபித்த சிறப்பு செபமாலையில் எடுத்துரைத்தார் கர்தினால் மத்தேயு சூப்பி.
பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் இரவு 8 மணியளவில், இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 12.30 மணியளவில் பொலோஞ்னாவின் புனித டொமேனிக்கோ ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நல்ல உடல்நலம் பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு செபமாலை வழிபாட்டிற்குத் தலைமேயேற்றபோது இவ்வாறு கூறினார் போலோஞ்னா உயர்மறைமாவட்டத்தின் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் மத்தேயு சூப்பி.
திருத்தந்தைக்கான இந்த சிறப்பு செபமாலையில் அனைத்து நோயாளர்கள், மறக்கப்பட்டவர்கள், தனிமையில் இருப்பவர்கள், வன்முறை மற்றும் போர் என்னும் நோயுடன் வாழ்பவர்களையும் நினைவில் வைத்து அவர்களுக்காக செபிப்பதும் திருத்தந்தை அவர்களை மகிழ்விக்கும் என்றும் கூறி அவர்களுக்காகவும் செபித்தார் கர்தினால் சூப்பி.
நமது உறுதியான எதிர்நோக்காகிய இயேசு, நமது செபங்களுக்கு செவிசாய்த்து, எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்பதை உணர்த்தட்டும் என்று எடுத்துரைத்த கர்தினால் சூப்பி அவர்கள், உலகெங்கிலும் இருந்து திருத்தந்தையின் உடல்நலனுக்காக செபிக்கும் மக்களுடன் இணைந்து செபிப்போம் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்