MAP

கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின்  (ANSA)

சிறைக்கைதிகளை விடுவிக்கும் கியூபாவின் செயல் நம்பிக்கையின் அடையாளம்!

2025-ஆம் ஆண்டு இந்த நம்பிக்கையின் திசையில் தொடரும் என்றும், குறிப்பாக நடந்துகொண்டிருக்கும் பல மோதல்களுக்கு மத்தியில் ஒரு போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்ற நல்ல செய்திகள் பெருகும் என்றும் நாங்கள் நம்புகிறோம் : கர்தினால் பியெத்ரோ பரோலின்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

553 சிறைக்கைதிகளைப் படிப்படியாக விடுவிக்கப்போவதாக அறிவித்துள்ள கியூபா அரசின் நற்செயல், இந்த யூபிலி ஆண்டின் தொடக்கத்தில் பெரும் நம்பிக்கையின் அடையாளமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின். 

ஜனவரி 15, இப்புதனன்று, வத்திக்கான் ஊடகத்தின் கருத்துக்கான கோரிக்கைக்குப் பதிலளித்தபோது இவ்வாறு தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், கியூபாவின் அதிகாரிகள் எடுத்துள்ள இந்த முடிவு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் யூபிலி ஆண்டின் வேண்டுகோளுக்கு ஏற்ப அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும், புனித ஆண்டின் போது அடிக்கடி நிகழ்ந்தது போல் இதுவும் இரக்கத்தின் ஒரு செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2024-ஆம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவரால் பன்னிரண்டு பேரின் மரண தண்டனைகள் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டதுடன், ஜிம்பாப்வே நாடும் மரண தண்டனையை நீக்கியது என்ற செய்தியுடன் முடிவடைந்தது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் கார்த்தினால் பரோலின்.

2025-ஆம் ஆண்டு இந்த நம்பிக்கையின் திசையில் தொடரும் என்றும், குறிப்பாக, நடந்துகொண்டிருக்கும் பல மோதல்களுக்கு மத்தியில் ஒரு போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்ற நல்ல செய்திகள் பெருகும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜனவரி 2025, 15:07