MAP

ஜோர்டன் மன்னருடன் கர்தினால் பரோலின் ஜோர்டன் மன்னருடன் கர்தினால் பரோலின் 

மத்தியக்கிழக்கின் திருப்பீடப் பிரதிநிதிகளுடன் திருப்பீடச் செயலர்

இலபனோனின் புதிய அரசுத்தலைவர் Joseph Aoun அவர்களுக்கு தொலைபேசி வழி தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மத்தியக்கிழக்கு நாடுகளுக்கான திருப்பீடப் பிரதிநிதிகளை ஜோர்டன் தலைநகர் அம்மனில் சந்தித்த திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மத்தியக்கிழக்குப் பகுதியில் அமைதிக்கான தன் ஆவலை வெளிப்படுத்தியதுடன் போர் நிறுத்தத்திற்கும் அழைப்புவிடுத்தார்.

யோர்தான் நதிக்கரையில் கட்டப்பட்ட இயேசுவின் திருமுழுக்கு ஆலயத்தை திருநிலைப்படுத்தும் நோக்கத்துடன் ஜோர்டான் நாட்டிற்குச் சென்ற கர்தினால் பரோலின் அவர்கள், ஜனவரி 13ஆம் தேதி திங்களன்று மத்தியக்கிழக்குப் பகுதிகளுக்கான திருப்பீடத்தூதர்களை அம்மனில் சந்தித்து உரையாற்றினார்.

பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டன், ஈரான், ஈராக், இஸ்ராயேல், குவைத், லெபனோன், ஓமன், பாலஸ்தீனம், கத்தார், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கான திருப்பீட பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடச் செயலர், மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் போர்நிறுத்தமும் அமைதியும் இடம்பெறவேண்டும் என்ற அழைப்பை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

அதே நாள் பிற்பகலில் இலபனோனின் புதிய அரசுத்தலைவர் Joseph Aoun அவர்களுடன் திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள் தொலைபேசியில் உரையாடி புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டதோடு அவருக்கான தன் இறைவேண்டலுக்கும் உறுதியளித்தார்.

இம்மாதம் 9ஆம் தேதியன்று இலபனோனின் புதிய தலைவராக Joseph Aoun அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேவேளை, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள Nawaf Salam அவர்கள் குறித்தும் தன் மகிழ்ச்சியை வெளியிட்டார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஜனவரி 2025, 15:41