MAP

கர்தினால் பியத்ரோ பரோலின் கர்தினால் பியத்ரோ பரோலின்  (AFP or licensors)

திருமுழுக்கின் வழியாக கடவுளின் பிள்ளைகளாக மாறுகின்றோம்

இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பை வெறும் வார்த்தைகளால் மட்டுமன்றி நமது வாழ்வாலும் கடைபிடிக்க எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டானது நமக்கு வலியுறுத்துகின்றது - கர்தினால் பரோலின்

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருமுழுக்கு அருளடையாளத்தில் பயன்படுத்தப்படும் நீரின் வழியாக தூய ஆவியின் கொடையினால் நாம் புதுப்பிக்கப்படுகின்றோம் என்றும், கடவுளின் வாழ்வை நமது வாழ்வில் அனுமதிக்கின்றோம், கடவுளின் பிள்ளைகளாக மாறுகின்றோம் என்றும் கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

சனவரி 10 வெள்ளிக்கிழமை யோர்தானில் அல்-மக்தாஸில் உள்ள இயேசுவின் புதிய திருமுழுக்குக் கோவிலைப் புனிதப்படுத்தும் திருச்சடங்குத் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின். இத்திருப்பலியில் ஏறக்குறைய 6000 மக்கள் கலந்துகொண்டனர்.

திருமுழுக்கு அருளடையாளத்தின் வழியாக நாம் புதிய வாழ்விற்குள் நுழைகின்றோம் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், திருமுழுக்கு நமக்குள் அழியாத வாழ்வின் தொடக்கமாக உருவாகின்றது என்றும், திருமுழுக்கு பெற்றதால் நாம் அனைவரும் கிறிஸ்தவர்களானோம் என்றும் எடுத்துரைத்தார்.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் யோர்தான் ஆற்றைக் கடந்து செல்லுதல் என்பது வாழ்வைக் கடந்து செல்லுதல், மறுவாழ்விற்குள் செல்லுதல் என்பதை அடையாளப்படுத்துகின்றது என்றும், இதனால் இயேசுவின் திருமுழுக்குக் கோவில் முதன்மையான ஆலயமாக நமது வாழ்வை புதுப்பிக்கும் ஆலயமாக திகழ்கின்றது என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பை வெறும் வார்த்தைகளால் மட்டுமன்றி நமது வாழ்வாலும் நாம் கடைபிடிக்க எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டானது வலியுறுத்துகின்றது என்று சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், இவ்வாண்டு மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் ஆண்டு திருப்பயணிகளாக நாம் வாழ்வதற்காக திருஅவை அழைக்கும் ஆண்டு என்றும் தெரிவித்தார்.

இயேசுவின் திருமுழுக்குக் கோவில் அர்ச்சிப்பிற்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துக்களை எடுத்துரைத்த கர்தினால் அவர்கள்,  யோர்தானின் அரசர் இரண்டாம் அப்துல்லா மற்றும், யோர்தான் இலத்தீன் கத்தோலிக்க வழிபாட்டுமுறை நதீம் முவாஷா அவர்களுக்கும் தனது நன்றியினையும் திருஅவை உடனான உறவில் ஆழமான இணைப்பு கொண்டு இணைந்து பணியாற்றும் அவர்களது செயலுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

போர், வன்முறை மற்றும் மோதல்களை உருவாக்கும் ஆயுதங்கள் அமைதியடைந்து உலகில் அமைதி நிலைக்கட்டும் என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், அமைதியின்றி துன்புறும் மக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்கள் அனைவருக்காகவும் செபிப்போம் என்றும், வன்முறையற்ற எதிர்காலத்தை உறுதிசெய்வோம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜனவரி 2025, 11:11