MAP

இதயமும் எதிர்நோக்கும் பத்திரிக்கையாளர்களின் கருவிகள்

நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள், மற்றவர்களை விட சிறந்தவர்கள், மற்றவர்களை நம்மால் நீதித்தீர்ப்பிட முடியும் என்று நினைக்காமல், நமது பெருமையை விட்டுவிட வேண்டும் - கர்தினால் ரெய்னா

மெரினா ராஜ் - வத்திக்கான்

இதயம் எதிர்நோக்கு ஆகிய இரண்டும் ஒவ்வொரு பத்திரிகையாளரும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க, பிறருடன் தொடர்புகொள்ள, எடுத்துரைக்க பயன்படுத்த வேண்டிய கருவிகள் என்றும், இயேசுவைப் போன்ற தகவல் தொடர்பாளர்களாக, உண்மையுடனும் உறுதியுடனும் பணியாற்றுபவர்களாக நாம் வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Baldassare Reina.

சனவரி 24 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளுர் நேரம் மாலை 7 மணியளவில் தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் நடைபெற்ற உலக சமூகத் தொடர்பாளர்களுக்கான திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் உரோம் மறைமாவட்ட அதிபர் தந்தையான கர்தினால் Baldassare Reina.

எதிர்நோக்கைத் தெரிவிப்பதன் வழியாக வெறித்தனமற்ற, சாந்தமுள்ள தகவல் தொடர்பாளர்களாக நாம் இருக்கவேண்டும், இயேசு போல சாந்தமுள்ள வகையில் நமது பிறருடன் உரையாட வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் ரெய்னா அவர்கள் விபச்சார வழக்கில் பிடிபட்ட பெண் பற்றிய நிகழ்வில் இயேசு மிகுந்த சாந்தத்துடன் திகழ்ந்தார் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர், குற்றம் சாட்டியவர்கள் என இருவரிடமும் சாந்த குணத்துடன் பதிலளித்தார் என்றும் கூறினார்.

“யூபிலி என்பது அனைவருக்கும் இரக்கத்தின் காலம் என்று வலியுறுத்திய கர்தினால் ரெய்னா அவர்கள், நாம் செய்த பாவங்களின் வெளிச்சத்தில் அல்ல, மாறாக எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் இரக்கத்தின் ஆற்றலில் நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யும் காலம் இந்த யூபிலி ஆண்டுக்காலம் என்றும் கூறினார்.

எதிர்நோக்கின் தகவல் தொடர்பாளர்களாக கத்தோலிக்கப் பத்திரிக்கையாளர்கள், சமூகத்தொடர்பாளர்கள் இருக்கவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 59ஆவது ஆண்டு உலக சமூகத்தொடர்பு நாளுக்கான செய்தியை நினைவுகூர்ந்த கர்தினால் ரெய்னா அவர்கள், இயேசுவைப் போன்ற தகவல் தொடர்பாளர்களாக, உண்மையுடன் உறுதியுடனும் பணியாற்றுபவர்களாக நாம் வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள், மற்றவர்களை விட சிறந்தவர்கள், மற்றவர்களை நம்மால் நீதித்தீர்ப்பிட முடியும் என்று நினைக்காமல், நமது பெருமையை விட்டுவிட வேண்டும் என்றும், ஏனெனில் கடவுள் மட்டுமே நீதியாளர் என்று விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது என்றும் கூறினார் கர்தினால் ரெய்னா.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசு தீர்ப்பிடவில்லை. ஏனெனில், நமது தவறுகளிலிருந்து நம்மை வரையறுப்பவர் அல்ல அவர் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் ரெய்னா அவர்கள், இயேசுவின் இத்தகைய கொள்கையை நாம் கடைபிடிக்கவேண்டும் என்றும், எதிர்நோக்கை விதைக்கவும், பரப்பவும், விரும்பும் நாம் இதனை நமது வாழ்வில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஜனவரி 2025, 13:12