MAP

திருத்தந்தை பதினான்காம் லியோ மக்கள் முன் உரையாற்றுகையில் திருத்தந்தை பதினான்காம் லியோ மக்கள் முன் உரையாற்றுகையில்  (@VATICAN MEDIA)

குடும்பங்களின் சான்றுள்ள வாழ்வு திருஅவைக்குத் தேவை

ஒரு குடும்பமாக இருப்பதன் மகிழ்ச்சி, ஒன்றுபட்டிருப்பதன் மகிழ்ச்சி, ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பதன் மகிழ்ச்சி, கடவுள் நமக்குக் கொடுத்த குடும்பம் என்னும் கொடை ஆகியவற்றை நாம் கொண்டாட வேண்டும் - திருத்தந்தை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒரு குடும்பமாக இருப்பதன் மகிழ்ச்சியை, ஒன்றுபட்டிருப்பதன் மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம் என்றும், உங்களது சான்றுள்ள வாழ்வு திருஅவைக்குத் தேவை என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 6 சனிக்கிழமை மாலை வத்திக்கான் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளால் சிறப்பிக்கப்பட்ட குடும்ப நாளில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான குடும்பத்தாரைச் சந்தித்து அவர்களை வாழ்த்திய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பெற்றொர்கள் தங்கள் குடுங்களுக்கு ஆற்றும் தியாகமுள்ள செயல்களுக்காக நன்றி என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், பெரும் தியாகத்துடன், ஒரு குடும்பமாக ஒற்றுமையாக வாழவும், இயேசு கிறிஸ்து நமக்கு விட்டுச் சென்ற ஆவியில் பங்கேற்கவும், அனைவரையும் வாழ்த்தினார்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த குடும்ப விழாவானது பன்முகத்தன்மை கொண்டதாகவும் வண்ணமயமாகவும் மாறி வருகிறது என்றும்,  இந்த ஆண்டு மே மாதம் திட்டமிடப்பட்ட இந்த விழா செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஒத்திவைக்கப்பட்டு செபடம்பர் 6 அன்று வத்திக்கானில் பணியாற்றுவோர் குடும்பத்தாரால் சிறப்பிக்கப்பட்டது.

வத்திக்கான் நகர தலைமை அலுவலக முகப்பில் இருந்து வெளிவந்த திருத்தந்தை அவர்களை குழந்தைகள் கரவொலி எழுப்பி பெருங்கூச்சலிட்டு வரவேற்றனர்.

குழந்தைகளைப் பார்த்து மகிழ்ந்த திருத்தந்தை அவர்கள், உங்கள் பெற்றோர் உங்களை அன்பு செய்வது போல நீங்களும் இவ்விருந்திற்கு வந்திருக்கும் ஒவ்வொருவரையும் அன்பு செய்ய வேண்டும் என்றும்,  ஏனெனில் நாம் அனைவரும் கடவுளின் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றோம் என்றும் கூறினார்.

ஒரு குடும்பமாக இருப்பதன் மகிழ்ச்சி, ஒன்றுபட்டிருப்பதன் மகிழ்ச்சி, ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பதன் மகிழ்ச்சி, கொடையாகப் பெற்றதைக் கொண்டாடுதல், குறிப்பாக வாழ்க்கை என்ற கொடை, கடவுள் நமக்குக் கொடுத்த குடும்பம் என்னும் கொடை ஆகியவற்றை நாம் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 செப்டம்பர் 2025, 14:03