உடன்பிறந்த உறவு, கூட்டொருங்கியக்கம் போன்றவற்றிற்கு சான்றுகளாக வாழ
மெரினா ராஜ் - வத்திக்கான்
புனித அகுஸ்தீன் நமக்குக் கற்பிப்பது போல் வாழ "ஒரே ஆன்மாவும் ஒரே இதயமும் கொண்டு கடவுளை அடைபவர்களாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், பிளவுகளால் காயமடைந்த உலகில், உடன்பிறந்த உறவு மற்றும் கூட்டொருங்கியக்கம் போன்றவற்றிற்கு சான்றுகளாக வாழ அவரில் அவரோடு ஒன்றாக மாற விரும்புகிறோம் என்றும் எடுத்துரைத்தார் அகுஸ்தீன் சபைத்தலைவர் Alejandro Moral Antón.
செப்டம்பர் 1 திங்களன்று மாலை உரோமில் உள்ள புனித அகுஸ்தீனார் திருத்தலத்தில் நடைபெற்ற அகுஸ்தினார் சபையின் பொதுப்பேரவைத் தொடக்கத் திருப்பலிக்கு முன்பாக திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை வாழ்த்தி வரவேற்றபோது இவ்வாறு எடுத்துரைத்தார் புனித அகுஸ்தினார் சபையின் தலைவர் அருள்தந்தை Alejandro Moral Antón.
வன்முறையின் தர்க்கத்திற்கு அடிபணிய வேண்டாம், உலகளாவிய உடன்பிறந்த உணர்வை சாத்தியமாக்கும் அன்பின் சுடரை இதயங்களில் போற்றுங்கள் என்று வலியுறுத்த திருத்தந்தை அவர்கள் ஒருபோதும் சோர்வடைந்ததில்லை என்று எடுத்துரைத்த அருள்தந்தை ஆன்டன் அவர்கள், போருக்கு விருப்பம் தெரிவிக்காதீர்கள் அதனை வெறுத்து ஒதுக்குங்கள் என்று அவர் விடுக்கும் அழைப்பானது ஒளி மற்றும் ஆறுதலின் வார்த்தைகளாக இருக்கின்றன என்றும் கூறினார்.
அமைதி, நம்பிக்கை மற்றும் படைப்பின் மீதான அக்கறையின் விதையாக மாற திருத்தந்தையின் வார்த்தைகள் உதவுகின்றன என்றும், அவரது உடனிருப்பானது நம்பிக்கை, தாழ்ச்சி மற்றும் அர்ப்பணிப்புடன், தங்களது பயணத்தைத் தொடர ஊக்குவிக்கிறது என்றும் கூறினார் அருள்தந்தை ஆண்டன்.
அண்மையில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட இளையோருக்கான யூபிலியானது, உற்சாகம் மற்றும் ஆற்றலால் நிறைந்திருந்தது என்றும், அந்த ஆற்றல் நற்செய்தியானது எப்போதும் மகிழ்ச்சி மற்றும் புதிய வாழ்க்கையின் ஆதாரமாக இருப்பதை நமக்கு நினைவூட்டி துணிவு மற்றும் நம்பிக்கையுடன் வாழும் பணிக்கு நம்மை அழைக்கின்றது என்றும் கூறினார் அருள்தந்தை ஆண்டன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்