MAP

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – தாகமாய் இருக்கிறது

செப்டம்பர் 3 மாதத்தின் முதல் புதன்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இயேசு சிலுவையில் கூறிய வார்த்தைகளான தாகமாய் இருக்கிறது என்ற தலைப்பில் தனது புதன் மறைக்கல்வி உரையினை எடுத்துரைத்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

செப்டம்பர் 3 மாதத்தின் முதல் புதன்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இயேசு சிலுவையில் கூறிய வார்த்தைகளான தாகமாய் இருக்கிறது என்ற தலைப்பில் தனது புதன் மறைக்கல்வி உரையினை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

கோடை வெப்பம் காரணமாக வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்று வந்த புதன் மறைக்கல்வி உரையானது இன்று மீண்டும் வத்திக்கான் வளாகத்தில் நடைபெற ஆரம்பித்தது. திறந்த காரில் வலம் வந்த படி மக்களை வாழ்த்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், வளாகத்தின் மேடைப்பகுதியை வந்தடைந்ததும் சிலுவை அடையாளம் வரைந்து தனது மறைக்கல்வி உரைக் கூட்டத்தினைத் துவக்கினார்.

அதன்பின் யோவான் நற்செய்தியில் உள்ள இயேசுவின் சாவு என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டன.

யோவான் 19:28-30

இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள் அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் “தாகமாய் இருக்கின்றது” என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே,

இயேசுவின் பாடுகளின் மையத்தில், இயேசுவின் வாழ்க்கையின் மிகவும் பிரகாசமான மற்றும் அதே நேரத்தில் இருண்ட சூழலில், யோவானின் நற்செய்தி ஒரு மகத்தான மறைபொருளைக் கொண்ட இரண்டு வார்த்தைகளை நமக்குத் தருகிறது. அவை, "தாகமாக இருக்கிறது"(19:28), ”எல்லாம் நிறைவேறிற்று"(19:30). இவை இயேசுவினுடைய கடைசி வார்த்தைகளாக இருந்தாலும் கடவுளின் மகனாக முழுப்பொறுப்பேற்று வாழ்ந்து அதனை நிறைவு செய்த இயேசுவின் முழுவாழ்வையும் இவ்வார்த்தைகள் அடையாளப்படுத்துகின்றன. சிலுவையில், இயேசு ஒரு வெற்றிகரமான வீரராகத் தோன்றவில்லை, மாறாக அன்பை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் தானம் பெறுபவர் (பிச்சைக்காரர்) போன்று தோன்றுகிறார். அவர் தன்னை எடுத்துரைக்கவோ, அறிவிக்கவோ, கண்டிக்கவோ அல்லது தற்காத்துக் கொள்ளவோ ​​இல்லை.

சிலுவையில் அறையப்பட்டவரின் தாகம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட உடலின் உடலியல் தேவை மட்டுமல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் ஆழமான விருப்பத்தின் வெளிப்பாடாகும்: அன்பு, உறவு, ஒற்றுமை. இது நமது மனித நிலையின் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்பிய ஒரு கடவுளின் அமைதியான அழுகை, இந்த தாகத்தால் துளைக்கப்பட அனுமதிக்கிறார். அன்பிற்காகக் கெஞ்சுவதற்கு வெட்கப்படாத கடவுள் அவர். இதனைத் தனது செயல்களினால் அவர் நமக்கு எடுத்துரைக்கின்றார். ஏனெனில் அன்பு என்பது கொடுப்பதை மட்டுமல்லாது, உண்மையாக இருக்கவும், கேட்பதற்குக் கற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

நான் தாகமாக இருக்கிறேன் என்று இயேசு கூறுவதன் வழியாக தனது மனிதநேயத்தையும் நம்முடைய மனித நேயத்தையும் வெளிப்படுத்துகிறார். நம்மில் யாரும் தனியாக மீட்பு பெற முடியாது. தன்னிறைவு பெற முடியாது. யாரும் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாது. நாம் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கும்போது அல்ல, மாறாக நாம் பெற்றுக்கொள்வதைக் கற்றுக்கொள்ளும்போதே வாழ்க்கை நிறைவு பெறுகிறது. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவிற்குப் படைவீரர்கள், புளித்த திராட்சை இரசத்தில் தோய்க்கப்பட்ட கடற்பஞ்சை ஈசோப்புத் தண்டில் பொருத்தி அவரது வாயில் சுவைக்க வைத்தார்கள். இந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு எல்லாம் நிறைவேறிற்று என்று கூறி ஆவியை ஒப்படைக்கின்றார். இயேசுவின் அன்பு தன்னைத் தேவையான ஒன்றாக ஆக்கியுள்ளது, அதனால்தான் அவர் தன் பணியை நிறைவு செய்து, ஆவியைக் கையளிக்கின்றார்.

கடவுள் செய்வதன் வழியாக அல்ல, செய்ய அனுமதிப்பதன் வழியாக மீட்கின்றார். தீமையை வலிமையால் வெல்வதன் வழியாக அல்ல, மாறாக அன்பின் பலவீனத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதன் வழியாக மீட்கின்றார். சிலுவையில், மனிதன் அதிகாரத்தினால் நிறைவடையவில்லை, மாறாக, பிறர் விரோதமாகவும் எதிரிகளாகவும் இருந்தாலும், அவர்களிடம் திறந்த தன்மையை நம்புவதில்தான் மீட்பு உள்ளது என்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார். மீட்பு என்பது சுயாட்சியில் இல்லை, மாறாக ஒருவரின் தேவையை தாழ்மையுடன் அங்கீகரிப்பதிலும் அதை எவ்வாறு சுதந்திரமாக வெளிப்படுத்துவது என்பதை அறிவதிலும் உள்ளது.

கடவுளின் திட்டத்தில் நமது மனிதகுலத்தின் நிறைவேற்றம் என்பது ஓர் ஆற்றலின் செயல் அல்ல, மாறாக நம்பிக்கையின் செயல். இச்செயலில் நமது அன்பிற்கான தாகம், உணர்விற்கான தாகம் மற்றும் நீதிக்கான தாகம் என்பது தோல்வியின் அடையாளம் அல்ல, மாறாக உண்மையின் அடையாளம் என்ற உண்மையும் நம்பிக்கையுமான ஒரு கதவு திறக்கப்படுகின்றது.

இந்த உண்மை, மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும், ஏற்றுக்கொள்வது கடினம். நாம் தன்னிறைவு, செயல்திறன் மற்றும் நடத்தை போன்றவற்றிற்கு அதிக வெகுமதி அளிக்கும் ஒரு காலத்தில் வாழ்கிறோம். இருப்பினும், நமது மனிதகுலத்தின் அளவு நம்மால் அடையக்கூடியவற்றால் அல்ல, மாறாக நம்மை அன்புசெய்யவும், தேவைப்படும்போது உதவவும் அனுமதிக்கும் நமது திறனால் வழங்கப்படுகிறது என்பதை நற்செய்தி நமக்குக் எடுத்துக் காட்டுகிறது.

கேட்பது என்பது மாண்பற்றது அல்ல, மாறாக விடுதலை அளிக்கிறது என்பதைக் வெளிப்படுத்துவதன் வழியாக இயேசு நம்மைக் காப்பாற்றுகிறார். இது பாவத்தின் மறைவிடத்திலிருந்து வெளியேறி, ஒற்றுமையின் இடத்திற்குத் திரும்புவதற்கான வழி. ஆரம்பத்திலிருந்தே, பாவம் அவமானத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் மன்னிப்பு, உண்மையான மன்னிப்பானது, நாம் நமது தேவையை எதிர்கொள்ள முடியும்போது, இனி நிராகரிப்புக்கு அஞ்சாதபோது நம்மில் வருகிறது.

சிலுவையில் இயேசு கொண்ட தாகம் நம்முடைய தாகமும்கூட. அது இன்னும் உயிருள்ள தண்ணீரைத் தேடும் காயமடைந்த மனிதகுலத்தின் அழுகையாக வெளிப்படுகின்றது. இந்த தாகம் நம்மை கடவுளிடமிருந்து தூர விலக்குவதில்லை, மாறாக அவரை நோக்கி நம்மை ஒன்றிணைக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள நமக்கு துணிவு இருந்தால், நமது பலவீனம் கூட விண்ணகத்திற்கான ஒரு பாலம் என்பதைக் கண்டறியலாம். நாம் தன்னிறைவு பெற்றவர்களாக நடிப்பதை நிறுத்தும்போது விடுதலைக்கான பாதை திறக்கின்றது. கேட்பதில் திறக்கிறது - உடைமையாக்குவதில் அல்ல என்பதை உணர்ந்து கொள்வோம்.

உடன்பிறந்த உணர்வில், எளிமையான வாழ்வில், கேட்கும் கலையிலும், கணக்கீடு இல்லாமல் காணிக்கை செலுத்தும் கலையிலும், உலகம் அறியாத ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. நாம் அன்பைக் கொடுக்கவும் பெறவும் படைக்கப்பட்ட உயிரினங்கள் என்ற நமது இருப்பின் உண்மையான தன்மைக்கு நம்மை மீட்டெடுக்கும் ஒரு மகிழ்ச்சி அது.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவின் தாகத்தில் நம் எல்லா தாகத்தையும் நாம் அடையாளம் காண முடியும். நான் தேவையிலிருக்கின்றேன் என்பதை எப்படிச் சொல்வது எனத் தெரிந்துகொள்வதை விட மனிதாபிமானமானதோ, தெய்வீகமானதோ எதுவும் இல்லை என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக நாம் தகுதியற்றவர்கள் என்று உணரும்போது கேட்பதற்கு அஞ்சக்கூடாது. நம் கையை நீட்டுவதற்கு வெட்கப்படக்கூடாது. அந்த தாழ்மையான செயலில், நமது மீட்பு மறைக்கப்பட்டுள்ளது என்பது துல்லியமாக வெளிப்படுகின்றது.

இவ்வாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்ததும் கூடியிருந்த அனைத்து திருப்பயணிகளையும் வாழ்த்தினார்.

அதன்பின் விண்ணக்கத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து மக்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 செப்டம்பர் 2025, 09:54

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >