MAP

திருத்தந்தை. திருத்தந்தை.  

நம்பிக்கையின் தலைவராக திகழ்ந்தவர் திருத்தந்தை பெரிய கிரகோரியார்

யூபிலி திருப்பயணமானது கடவுளுடனான ஒன்றிப்பின் தீவிரமான ஒரு தருணமாக இருக்கும். திருப்பயணிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்போது, நம்பிக்கையில் பலப்படுத்தப்பட்டாவர்களாகவும், நன்மை செய்ய உத்வேகம் பெற்றவர்களாகவும் மாறுவார்கள் - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

சமுதாயம் மற்றும் திருஅவையின் மிகவும் கடினமான காலங்களில் ஒரு போதகராகவும் நம்பிக்கையின் தலைவராகவும் திகழ்ந்தவர் திருத்தந்தை பெரிய கிரகோரியார் என்றும், அவர் ஆற்றிய எல்லையற்ற செயல்பாட்டிற்காக "அவர் பெரிய கிரகோரியார்" என்று அழைக்கப்படுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 3, புதனன்று வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

கிறிஸ்துவின் மீதான அவரது நம்பிக்கையிலிருந்து ஆற்றலைப் பெற்று மகத்துவமும் மேன்மையும் மிக்கவராக அவர் திகழ்ந்தார் என்றும், நமது இருப்புக்கான ஒரே உண்மையான பலத்தை நாம் ஒவ்வொருவரும் கடவுளிடத்தில் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

சூடான் நிலச்சரிவு

மேலும், சூடானில் உள்ள டார்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், ஏராளமான பொதுமக்கள் பஞ்சத்தாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்டு, நகரத்தில் சிக்கித் தவிக்கின்றனர் என்றும், தாராசின் கிராமத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் நிலச்சரிவு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.

இப்பேரழிவானது துயரத்தையும் விரக்தியையும் மட்டுமே விட்டுச் சென்றுள்ளது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அது போதாதென்று, காலரா பரவல் ஏற்கனவே சோர்வடைந்துள்ள இலட்சக்கணக்கான மக்களை அச்சுறுத்துகிறது என்றும் கூறினார்.

சூடான் மக்களுடன், குறிப்பாக குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுடன் தன்னுடைய அளவுக்கு அதிகமான உடனிருப்பை வெளிப்படுத்திய திருத்தந்தை அவர்கள், பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் செபிப்பதாகவும் எடுத்துரைத்தார். மேலும், மனிதாபிமான வழித்தடங்களை உறுதிசெய்து, இந்த மனிதாபிமான பேரழிவைத் தடுக்க ஒருங்கிணைந்த பதிலை செயல்படுத்துமாறு பொறுப்பானவர்களுக்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் மனமார்ந்த வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை அவர்கள், மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, சூடான் மக்களுக்கு நம்பிக்கை, மாண்பு, மற்றும் அமைதியை மீட்டெடுக்க கட்சிகளுக்கு இடையே ஒரு தீவிரமான, நேர்மையான மற்றும் உள்ளடக்கிய உரையாடலைத் தொடங்க வேண்டிய நேரம் இது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

யூபிலி ஆண்டுத் திருப்பயணிகள்

இத்தாலிய மொழி திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இந்த யூபிலி திருப்பயணமானது கடவுளுடனான ஒன்றிப்பின் தீவிரமான ஒரு தருணமாக இருக்கும் என்று நம்புவதாகவும், திருப்பயணிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்போது, நம்பிக்கையில் பலப்படுத்தப்பட்டாவர்களாகவும், நன்மை செய்ய உத்வேகம் பெற்றவர்களாகவும் மாறுவார்கள் என்றும் கூறினார்.

பல்வேறு தலத்திருஅவைக் குழுக்களையும், குறிப்பாக கரினாரோ, ஓக்லியாரா, லம்போரெச்சியோ மற்றும் கொலோக்னோ அல் செரியோவைச் சேர்ந்த தலத்திருஅவைக் குழுக்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்து என்ற புதிய வாழ்க்கைக்கு அந்தந்த சமூகங்கள் தங்களை இன்னும் அதிகமாகத் திறக்க வேண்டும் என்றும் ஊக்கமூட்டினார்.

திருத்தந்தை புனித பெரிய கிரகோரியார்

இளைஞர்கள், நோயாளிகள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள்,  செப்டம்பர் 3, புதனன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் திருத்தந்தை புனித பெரிய கிரகோரியாரின் திருவிழாவை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்.

பெரிய கிரகோரியாரின் திரு உடல் இருக்கும் கல்லறையானது வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உள்ளது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், புனித பெரிய கிரிகோரியாரின் திருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில், அவர், சமுதாயத்திற்கும் திருஅவைக்கும் மிகவும் கடினமான காலங்களில் ஒரு போதகராகவும் நம்பிக்கையின் தலைவராகவும் அவர் ஆற்றிய விதிவிலக்கான செயல்பாட்டிற்காக "அவர் பெரிய கிரகோரியார்" என்று அழைக்கப்படுகிறார் என்றும் கூறினார்:

கிறிஸ்துவின் மீதான அவரது நம்பிக்கையிலிருந்து ஆற்றலைப் பெற்று மகத்துவமும் மேன்மையும் மிக்கவராக அவர் திகழ்ந்தார் என்றும், நமது இருப்புக்கான ஒரே உண்மையான பலத்தை நாம் ஒவ்வொருவரும் கடவுளிடத்தில் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 செப்டம்பர் 2025, 15:11