MAP

விபத்துக்குள்ளான தொங்கூர்தி விபத்துக்குள்ளான தொங்கூர்தி  

லிஸ்பன் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தையின் இரங்கல் தந்திச்செய்தி

தொங்கூர்தி எனப்படும் கேபிள் காரானது தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்தும், 18 பேர் படுகாயமடைந்தும் உள்ள நிலையில், 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

போர்த்துக்கலின் லிஸ்பனில்  ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பவட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலகளை தந்திச்செய்தி ஒன்றின் வழியாக எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 4 வியாழனன்று அனுப்பப்பட்ட திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் இரங்கல் தந்திச்செய்தியானது லிஸ்பனின் முதுபெரும்தந்தை Dom Rui Manuel Sousa Valério அவர்களுக்குத் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

தொங்கூர்தி எனப்படும் கேபிள் காரானது தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்தும், 18 பேர் படுகாயமடைந்தும் உள்ள நிலையில், 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் செய்தியை அளித்துள்ள திருத்தந்தை அவர்கள்,

அன்புக்குரியவர்களை இழந்த துயரமடைந்திருக்கும் குடும்பங்களுக்கு தனது மனமார்ந்த இரங்கலையும், தனது ஆன்மிக நெருக்கத்தையும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் முழுமையாக குணமடையவும், பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையின் பலத்தையும் வேண்டிக்கொள்வதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், மீட்புப் பணிகளில் பணியாற்றுபவர்கள் அனைவருக்க்காக செபிப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லின் தலைநகர் லிஸ்பனில் குளோரியா புனிகுலர் கேபிள் காரானது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த குளோரியா புனிகுலர் கேபிள் காரானது, நகரத்தின் வரலாற்று சின்னமாகவும், சுற்றுலா பயணிகள் மத்தியில் இது மிகவும் பிரபலமானதாகவும் விளங்குகின்றது.

உயிரிழந்துள்ள 15 பேர் யார் என அடையாளம் காணும் பணி நடந்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 செப்டம்பர் 2025, 15:46