புதிய அருளாளர்களான பேராயர் எதுவார்தோ மற்றும் மரிய மதலேனா
மெரினா ராஜ் - வத்திக்கான்
அருளாளர்கள் பேராயர் எதுவார்தோ மற்றும் மரிய மதலேனா ஆகிய இருவரும் நற்செய்தியின் அழகுக்கு துணிச்சலான சாட்சிகளாகத் திகழ்கின்றார்கள் என்றும் இத்தகைய இரண்டு மறைசாட்சிகளை திருஅவைக்கு அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை
செப்டம்பர் 7, ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற புனிதர் பட்ட திருப்பலியில் பங்கேற்ற மக்களுக்கு அதன் நிறைவில் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இக்கொண்டாட்டத்தை நிறைவேற்றுவதற்காக வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி வாழ்த்தினார்.
செப்டம்பர் 6, சனிக்கிழமை திருஅவை இரண்டு அருளாளர்களைப் பெற்றுள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒருவர் எஸ்தோனியாவின் தாலினைச் சார்ந்தவரும் இயேசு சபையைச் சார்ந்தவருமான பேராயர் எதுவார்தோ (Edoardo Profittlich) மற்றும் ஹங்கேரியின் மரிய மதலேனா (Maria Maddalena Bódi_ ஆகிய இருவரும் நற்செய்தியின் அழகுக்கு துணிச்சலான சாட்சிகளாகத் திகழ்கின்றார்கள் என்றும் கூறினார்.
பேராயர் எதுவார்தோ 1942-ஆம் ஆண்டு சோவியத் ஆட்சி திருஅவையைத் துன்புறுத்தியபோது மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என்றும், ஹங்கேரியின் வெர்ஸ்ப்ரெமில், இருந்த இளம்பெண் மரியா மடலேனா போடி தன்னைத் தாக்க நினைத்த வீரர்களை எதிர்த்ததற்காக அவர் 1945-ஆம் ஆண்டு கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
புனித பூமி, உக்ரைன் மற்றும் போரால் கறை படிந்த மற்ற எல்லா நிலங்களிலும், அமைதிக்காக இடைவிடாது செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும், மனசாட்சியின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
மரணத்தையும் அழிவையும் விதைக்கின்ற, ஆயுதங்களால் அடையப்படும் வெளிப்படையான வெற்றிகள் உண்மையில் தோல்விகள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அவை ஒருபோதும் அமைதியையோ பாதுகாப்பையோ கொண்டு வராது என்றும் கூறினார்.
கடவுள் போரை ஒருபோதும் விரும்பவில்லை, மாறாக அவர் அமைதியை விரும்புகிறார் என்றும், வெறுப்பின் சுழலை விட்டுவிட்டு உரையாடலின் பாதையை எடுக்க உறுதிபூண்டவர்களை அவர் பலப்படுத்துகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்