சூடான் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் தந்திச்செய்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
சூடானின் மத்திய டார்பூர் பகுதியில் உள்ள தாராசின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து இரங்கல் தந்திச்செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 2, செவ்வாயன்று EL-OBEID மறைமாவட்ட ஆயர் YUNAN TOMBE TRILLE KUKU ANDALI அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் தந்திச்செய்தியானது திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற வேண்டி செபிப்பதாகவும், நிலச்சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்காகவும் செபிப்பதாகவும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இந்த பயங்கரமான துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக தங்களது பிள்ளைகளை இழந்து வருந்துகின்ற குடும்பங்கள் அனைத்திற்கும் தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், இறந்தவர்களை எல்லாம் வல்ல இறைவனின் இரக்கத்தில் அர்ப்பணித்து அவர்களின் ஆன்மா நிறை அமைதி பெற செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சூடானின் டார்ஃபுர் (Darfur) வட்டார நிலச்சரிவினால், மார்ரா (Marra) மலைப் பிரதேசத்தின் தராசின் (Tarasin) கிராமம் அழிந்து போனது. 1,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், டார்ஃபுரில் சூடான் அரசாங்கத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே உள்நாட்டுக் கலகம் நடைபெறுவதோடு, இடைவிடாமல் அடைமழையும் பெய்வதால் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்கள் மார்ரா மலைப் பகுதியில் தஞ்சமடைந்திருந்த சூழலில் இந்நிலச்சரிவானது ஏற்பட்டுள்ளது. அண்மைக்கால சூடான் வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவினால் பலர் மண்ணில் புதைந்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்