MAP

திருத்தந்தையின் யூபிலி ஆண்டு மறைக்கல்வி உரை

தனது வாழ்வில் அவர் கண்டறிந்த மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இயேசுவின் சிலுவையைக் கண்டார், தனது அனைத்து செல்வங்களையும் விற்று புதையலைப் பெற்றுக்கொண்டவர் போல் ஏலெனா திகழ்ந்தார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

தேடுதலின் பெண்ணாக, இயேசுவின் வாழ்க்கை என்னும் நம்பிக்கை நிறைந்த புதையலைத் தோண்டும் ஒரு பெண்ணாக கான்ஸ்டாண்டிநோபில் அரசரின் தாய் ஏலெனா காட்சியளிக்கின்றார் என்றும், இத்தகைய பெண்ணின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றி வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 6, சனிக்கிழமை வத்திக்கான் துய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய யூபிலி ஆண்டு மறைக்கல்வி உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் புதையல் உவமை குறித்தக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மத்தேயு 13:44

புதையல் உவமை

“ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

சிறு குழந்தைகள் மண்ணைத் தோண்டி அதற்குள் என்ன இருக்கின்றது என்று ஆவலுடன் பார்த்து விளையாடுவது போலல்லாமல், புதையல் உவமையில் இயேசு மகிழ்ச்சியை நமக்கு ஆச்சர்யமுள்ள வகையில் வழங்குகின்றார் என்றும், இறையரசும் நிகழ்காலத்தின் மேலோட்டமான கடினமான பகுதியை நாம் உடைத்து எறிந்து உள்ளே செல்லும்போது நமது நம்பிக்கை மீண்டும் தூண்டி எழுப்பப்படுகின்றது என்றும் கூறினார்.

கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக சுதந்திரமாக வாழலாம் என்ற நிலை வந்தவுடன் இயேசுவின் சீடர்கள் அவர் பாடுகள் பட்ட இடம், சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்ட இடம், அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்த இடம், என எல்லாவற்றையும் தோண்டத்தொடங்கினர் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கான்ஸ்டாண்டிநோபிளின் தாயான Flavia Giulia Elena, இத்தகைய தேடல்களின் ஆன்மாவாகக் கருதப்படுகின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

தேடுதலின் பெண்ணாக, இயேசுவின் வாழ்க்கை என்னும் நம்பிக்கை நிறைந்த புதையலைத் தோண்டும் ஒரு பெண்ணாக அவர் காட்சியளிக்கின்றார் என்றும், இத்தகைய பெண்ணின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றி வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஓர் பேரரசியாக இந்த உலகில் எத்தனை விதமான மரியாதைகளையும் இன்பங்களையும் அவர் அடைந்திருக்க முடியும், எத்தனை விதமான இடங்களை அவர் விரும்பியிருக்கக்கூடும் ஆனால் அதை எல்லாம் விடுத்து எருசலேமைத் தேர்ந்தெடுத்து இயேசுவின் வாழ்க்கையை கண்டறியும் ஆவலில் இன்பம் காண்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

தனது வாழ்வில் அவர் கண்டறிந்த மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இயேசுவின் சிலுவையைக் கண்டார் என்றும், தனது அனைத்து செல்வங்களையும் விற்று புதையலைப் பெற்றுக்கொண்டவர் போல் ஏலெனா திகழ்ந்தார் என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், இயேசுவின் சிலுவையே அவரது வாழ்வில் அவர் கண்டறிந்த மிகப்பெரிய வாழ்வாகவும் அதன் பாதிப்பு அவரது வாழ்வையே மதிப்புமிக்கதாகவும் மாற்றியது என்றும் கூறினார்.

அரண்மணையில் பிறக்காமல் சாதாரண குடும்பத்தில் பிறந்தவரும் விடுதிக்காப்பாளருமாக இருந்த ஏலெனாவை பேரரசர் கான்ஸ்டாண்டியஸ் விரும்பி மணந்துகொண்டார், இருப்பினும் அரச அதிகாரம் காரணமாக அவரை ஏற்க மறுத்த அவர் தனது மகன் கான்ஸ்டாண்டைன்நோபிளை பல ஆண்டுகள் அவரிடமிருந்து பிரித்து வைத்தார் என்றும், இத்தகைய சிலுவையை தனது வாழ்வில் சுமந்து கொண்டிருந்த ஏலெனாவிற்கு இயேசுவின் சிலுவை மாற்றத்தைத் தந்தது என்றும் கூறினார் திருத்தந்தை.

வாழ்வில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் இறைவனைத் தேடும் ஒரு பெண்ணாக. கிறிஸ்தவராக மாற முடிவு செய்தவர் அரசி ஏலெனா என்றும், தான தர்மங்கள் செய்வதிலும், ஏழை மக்களை அன்பு செய்வதிலும் சிறந்து விளங்கினார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அதிகமான மாண்பும் நம்பிக்கையும் கொண்ட மனசாட்சி உள்ள மனமானது இந்த உலகை மாற்றுகின்றது என்றும், கடவுளின் அரசை புதையல் போல நாமும் தேடி கண்டடையவேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நமது கால்களுக்கு அடியிலேயே புதையல் உள்ளது, என்ற நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்றும்,  சிறு குழந்தைகளைப்போல மாறினால், இறையரசையும், மகிழ்ச்சியையும் நாம் தேடிக்கண்டடைவோம் இறைவன் எப்போதும் நமது அடியில் இருந்து நம்மை உயர்த்தி விடக்காத்திருக்கின்றார் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 செப்டம்பர் 2025, 13:14

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >