உள்ளிருந்து ஒளிரும் மாண்பைப் பெற்றவர்கள் நாம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுளின் பார்வையில் தாங்கள் மிகவும் விலைமதிப்பற்றவர்கள் என்பதைப் புரிந்துகொண்டவர்கள், தாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதை ஆழமாக உணருபவர்கள், அனைவரும் தங்களை உயர்த்திக் கொள்ள பெரிய விடயங்கள் உள்ளன என்றும், உள்ளிருந்து ஒளிரக்கூடிய ஒரு மாண்பினை அவர்கள் கொண்டுள்ளனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 31, பொதுக்காலத்தின் 22-ஆம் ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, நாம் பணி செய்யக் கற்றுக் கொள்ளும்போது தாழ்ச்சி முன்னுக்கு வருகிறது, அது முதலில் இடம் பெறுகிறது என்றும், கடவுளின் அரசும், அவருடைய நீதியும் உண்மையிலேயே நம் ஆர்வத்தைக் கவர்ந்திருக்கும்போது, தாழ்ச்சி நம்மில் எழுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
திருஅவை அனைவருக்கும் மனத்தாழ்ச்சிக்கான பயிற்சிக் களமாக இருக்க இறைவனிடம் கேட்போம் என்றும், அனைவரும் எப்போதும் வரவேற்கப்படும் இடங்களாக, இயேசு தனது வார்த்தைகளை எடுத்துரைக்கவும், அவரது தாழ்ச்சி மற்றும் விடுதலை உணர்வை நமக்குக் கற்பிக்கவும் கூடிய ஒரு வீடாகவும் தலத்திருஅவை இருக்க செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.
ஓய்வு மற்றும் திருவிழா நாள்களில் குடும்பமாக நாம் அனைவரும் ஒன்றாக ஒரே மேசையில் உணவருந்துவது ஒவ்வொரு கலாச்சாரத்திலும் அமைதி மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகின்றது என்றும், விருந்தினராக இருப்பதற்கு மற்றவர்களின் உலகத்திற்குள் நுழைவதற்கான மனத்தாழ்ச்சி அவசியம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மனத்தாழ்ச்சியோடு விருந்தினர்களாக மாற அழைக்கப்படும் நாம், நம்முடைய சந்திப்புக்களின் வழியாகவும், அடையாளச் செயல்களின் வழியாகவும் சந்திப்புக் கலாச்சாரத்தை நம்மில் வளர்க்கின்றோம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், மற்றவர்களைச் சந்திப்பது என்பது மிக எளிதானதல்ல பரிசேயரால் விருந்திற்கு அழைக்கப்பட்ட இயேசு, அவர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டார் என்றும் எடுத்துரைத்தார்.
இயேசுவினுடைய கண்கள் வழியாக நாம் ஒருவர் மற்றவரையும், நம்மையும் பார்ப்பது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், வாழ்க்கையை ஒரு போட்டியாகக் கருதாமல், அங்கீகாரங்களைப் பெற வேண்டும் என்று வருந்தாமல், ஒருவர் மற்றவரை தேவையில்லாமல் ஒப்பிடாமல் இருக்க முயல்வோம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்