போர் நிறுத்தம் மற்றும் உரையாடலுக்காக வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
அலட்சிய மனப்பான்மைக்கு அடிபணியாமல், செபம் மற்றும் உறுதியான தொண்டுப்பணிகளின் வாயிலாக, போரினால் பாதிக்கப்படும் உக்ரைன் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் உடனடி போர் நிறுத்தம் மற்றும் உரையாடலுக்கான தீவிர அர்ப்பணிப்புக்கான வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 31, ஞாயிறு வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
உக்ரைனில் தொடர்ந்து நடைபெற்ருக்கொண்டிருக்கும் போரானது தொடர்ந்து இறப்பையும், அழிவையும் விதைத்து வருகிறது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அண்மைய நாள்களில், தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதையும் நினைவுகூர்ந்தார்.
உக்ரைன் மக்கள், காயமடைந்த அனைத்து குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என அனைவரோடும் தனது நெருக்கத்தைப் புதுப்பிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பன்னாட்டு சமூகத்தின் ஆதரவுடன், ஆயுதங்களின் தர்க்கத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் அமைதியின் பாதையை எடுப்பதற்கான பொறுப்பானவர்களுக்கான நேரம் இது என்றும் கூறினார்.
ஆயுதங்களின் குரல் அமைதியாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, அதே நேரத்தில் உடன்பிறந்த உணர்வு மற்றும் நீதிக்கான குரல் எழுப்பப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் பள்ளி திருப்பலியின் போது நடந்த துயரமான துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் எண்ணற்றக் குழந்தைகளுக்காக செபிப்போம் என்றும், நமது உலகத்தைப் பாதிக்கும் பெரிய மற்றும் சிறிய ஆயுதங்களின் தொற்றுநோயை நிறுத்த கடவுளிடம் மன்றாடுவோம் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், (எசாயா 2:4) என்ற எசாயா இறைவாக்கினரின் வாக்கை நிறைவேற்ற நம் அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்று கூறிய திருத்தந்தை அவர்கள், மவுரித்தேனியாவின் அட்லாண்டிக் கடற்கரையிலிருந்து கவிழ்ந்த கேனரி தீவுகளுக்கு 1,100 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொண்ட புலம்பெயர்ந்தோர் நிறைந்த படகு விபத்தில் இறந்தோரைக் குறித்தும் எடுத்துரைத்தார்.
படகு விபத்தில் இறந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நேர்ந்த நிலை குறித்து ஆழ்ந்த துயரம் நம் இதயங்களில் நிறைந்துள்ளது என்றும், இந்த கொடிய சோகம் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
"நான் அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள் (மத் 25:35) என்ற இயேசுவினது வார்த்தையை முழுமையாக நடைமுறைப்படுத்த, தனிநபர்களாகவும், ஒரு சமூகமாகவும், கடவுள் நமக்குக் கற்பிக்க வேண்டும் என்று செபிப்போம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், காயமடைந்த, காணாமல் போன மற்றும் இறந்த அனைவரையும் நம் இரட்சகரின் அன்பான அரவணைப்பில் ஒப்படைத்து செபிப்போம் என்றும் கூறினார்.
படைப்பின் அக்கறைக்கான உலக செப நாள்
செப்டம்பர் 1, திங்களன்று படைப்பின் அக்கறைக்கான உலக செப நாளாகக் கடைபிடிக்கப்பட இருக்கின்றது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, திருத்தந்தை பிரான்சிஸ், கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை, முதலாம் பர்த்தலோமேயு உடன் இணைந்து, கத்தோலிக்க திருஅவைக்காக இந்நாளை நிறுவினார் என்றும் கூறினார்.
படைப்பிற்கான செப நாளானது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதும் அவசரமானதும் ஆகும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இந்த ஆண்டின் கருப்பொருள் "அமைதி மற்றும் எதிர்நோக்கின் விதைகள்" என்று எடுத்துரைத்து, படைப்பிற்கான இந்த நாளை அக்டோபர் 4 புனித பிரான்சிஸ் அசிசியார் நாள் வரை நீட்டிப்பதாகவும் தெரிவித்தார்.
800 ஆண்டுகளுக்கு முன்பு புனித பிரான்சிஸ் அசிசியாரால் இயற்றப்பட்ட இயற்கையின் பாடல் வரிகளின் உணர்வில், கடவுளைப் புகழ்ந்து, அவருடைய இயற்கை என்னும் கொடையை அழிக்காமல், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதற்கான நமது உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம் என்றும் எடுத்துரைத்தார்.
உரோம் இத்தாலி மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்