ஒற்றுமையை நெசவு செய்பவர்களாக இளைஞர்கள் இருக்க வேண்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
வெறுப்பு மற்றும் மனக்கசப்பின் விதைகள் வளரும் இடத்தில் அமைதியின் விதைகளாக இருங்கள் என்றும், துருவமுனைப்பு மற்றும் பகைமை நிலவும் இடத்தில் ஒற்றுமையின் நெசவாளர்களாக இருங்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 5, வெள்ளியன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் மத்திய தரைக்கடல் இளைஞர் மன்றத்தினர் ஏறக்குறைய 40 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், உரையாடல் சாத்தியம் என்பதற்கும், வேறுபாடுகள் செழுமையின் அடிப்படையா இருக்கின்றந என்பதற்கும் சான்றுகளாக மத்திய தரைக்கடல் இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.
நம்முடன் வாழும் சகோதர சகோதரிகள் வேற்றினத்தாரோ எதிரியோ, பகைவரோ மோசமானவரோ அல்ல மாறாக எப்போதும் அவர் நம் உடன்பிறந்தோர் என்றும் இது மோதலுக்கான காரணமல்ல என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் பாரி மற்றும் பிளாரன்ஸில் இத்தாலிய ஆயர் பேரவையினர் தலைமையில் நடைபெற்ற இரண்டு மத்திய தரைக்கடல் இளைஞர்களுக்கான கூட்டமானது, சிந்தனை மற்றும் ஆன்மிகத்தின் பலனாக அமைந்தது என்று நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், இவ்விரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளும் மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள பல நாடுகளின் ஆயர்களை ஒன்றிணைத்தன என்றும் கூறினார்.
அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருப்பது என்பது எளிதான காரியமல்ல என்றும், மோதல்களை நிலைநிறுத்துவதில் ஆர்வமுள்ளவர்களால் அது எதிர்க்கப்படலாம் என்றும் கூறினார் திருத்தந்தை.
எதிர்நோக்கின் அடையாளங்களான இளைஞர்கள்
இளைஞர்கள், நம்பிக்கையின் அடையாளங்களாக, ஏமாற்றமடையாத நம்பிக்கையாக, கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய நம்பிக்கையாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவின் அடையாளங்களாக இருப்பது என்பது, அவரது சாட்சிகளாக, அவரது நற்செய்தியின் அறிவிப்பாளர்களாக, முதல் சீடர்கள் புறப்பட்ட கடலைச் சுற்றி, துல்லியமாக அந்த கடலைச் சுற்றி இருப்பது என்றும் கூறினார் திருத்தந்தை.
தங்களுக்கான நீதி மற்றும் மாண்பைக் கேட்க குரல் இல்லாதவர்களின் குரலாக இருங்கள் என்றும், நம்பிக்கையின் சுடரும் வாழ்க்கைக்கான சுவையும் மங்கிக்கொண்டிருக்கும் இடத்தில் ஒளியாகவும் உப்பாகவும் இருங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
மேலும், யாராவது நம்மைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் விட்டுவிடாது, கடவுள் நம்மை துறைமுகத்திற்குக் கொண்டு சேர்ப்பதற்காக எதிர்க்காற்றுகளை அலைகளையும் பயன்படுத்துகிறார் என்று கூறும் புனித சார்லஸ் டி ஃபூக்கோ அவர்களின் வரிகளையும் மேற்கோள்காட்டினார் திருத்தந்தை.
2020 -ஆம் ஆண்டில் பாரியில் இரண்டு முக்கிய தருணங்களையும், 2022 -ஆம் ஆண்டில் புளோரன்சிலும் இரண்டு முக்கிய தருணங்களைக் கொண்டிருந்த இத்தாலிய ஆயர் பேரவையால் ஊக்குவிக்கப்பட்ட பிரதிபலிப்பு மற்றும் ஆன்மீக செயல்முறையின் பலன்களில் ஒன்று மத்தியதரைக் கடல் இளைஞர் மன்றம் என்றும், இந்த நிகழ்வுகள் மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள பல நாடுகளின் ஆயர்களை ஒன்றிணைத்தன என்றும் கூறினார் திருத்தந்தை.
சந்திப்பிற்கான இடமான நமது கடல்
நமது கடல் என்பது எப்போதும் சந்திப்பிற்கான ஒரு இடமாகவும், உடன்பிறந்த உணர்விற்கான எளிய வழியாகவும், வாழ்க்கையின் தொட்டிலாகவும் இருக்க முடியும் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் நமது கடல் என்பது ஒருபோதும் இறந்தவர்களுக்கான கல்லறையாக இருக்கக்கூடாது என்ற விழிப்புணர்வுடன் செயல்படக் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்கள் தங்களது கனவுகளாலும், படைப்பாற்றலாலும், பொது நன்மைக்கான அடிப்படை பங்களிப்பைச் செய்ய முடியும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அச்செயலை நாளை அல்ல, இன்றே இப்போதே செய்யவேண்டும் ஏனென்றால் இளைஞர்கள் எதிர்நோக்கின் நிகழ்காலம் என்றும் கூறினார் திருத்தந்தை.
உடைந்த உறவுகளை மீட்டெடுத்தல், வன்முறையால் அழிக்கப்பட்ட நகரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல், பாலைவனமாக இருக்கும் இடத்தில் ஒரு தோட்டத்தை செழிக்க வைத்தல், நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துதல், தங்களுக்குள் சிக்கிக் கொண்டவர்களை தங்கள் சகோதரர்கள் அல்லது சகோதரிகளுக்கு பயப்பட வேண்டாம் என்று பாரியில் நடைபெற்ற கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்த கருத்துக்களை நினைவூட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்