மகிழ்ச்சி மற்றும் கூட்டொருங்கியக்கத்தின் பெண்ணான மரியா
மெரினா ராஜ் - வத்திக்கான்
மகிழ்ச்சியான பெண்ணாக அன்னை மரியா செவிசாய்ப்பதன் வழியாக, பதிலளிக்க எப்போதும் தயாராக இருக்கின்றார் என்றும், கூட்டொருங்கியக்கத்தின் பெண்ணாக முழுமையாக தூய ஆவியின் செயலில் பங்கேற்கின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 6, சனிக்கிழமையன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் திருப்பீட பன்னாட்டு மரியியல் கல்விக்கழகங்களின் 26-ஆவது பேரவையின் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 600 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருஅவையின் தாயான தூய கன்னி மரியா கடவுளின் தூய மக்களாக நாம் எப்படி இருக்க வேண்டும் எனக் கற்றுக்கொடுக்கின்றார் எனவும், சிந்தனை, ஆன்மீகம் மற்றும் உரையாடலுக்கான மன்றம், உண்மையான மற்றும் பயனுள்ள அன்னை மரியாவின் பணியில் மரியியல் ஆய்வுகள், அறிஞர்களை ஒருங்கிணைக்கும் பணி போன்றவற்றினை மரியியல் கல்விக்கழகங்கள் செய்து வருகின்றன எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மரியன்னையின் இதயத்தைக் கொண்ட ஒரு திருஅவையானது எப்போதும் மனம் மற்றும் இதயம், உடல் மற்றும் ஆன்மா, உலகளாவிய மற்றும் உள்ளூர், தனிநபர் மற்றும் சமூகம், மனிதநேயம் மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நம்பிக்கையின் உண்மைகளின் படிநிலையை சிறப்பாகப் பாதுகாத்து புரிந்துகொள்கிறது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
எதிர்நோக்கு மற்றும் ஆறுதலின் பணியை நோக்கிய ஒரு மரியன்னை பக்தி மற்றும் பயிற்சியானது, நம்மை மேலோட்டமான தன்மை மற்றும் அடிப்படைவாதத்திலிருந்து விடுவிக்கிறது என்றும், இது அனைத்து மனித எதார்த்தங்களையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, குரலற்றவர்களுக்கு குரலையும் மாண்பையும் வழங்குவதற்கு பங்களிக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
இறைவனுடைய தாயாக இருப்பதற்கான அழைப்பானது திருஅவையின் அழைப்பாகப் புரிந்துகொள்ளப்படுவதால், மரியன்னை இறையியலானது அனைத்து இறைமக்களிடமும், இறைவார்த்தையை துணிவுடன், அயலாரின் தேவையைகளுடன் புதிதாகத் தொடங்கும் விருப்பத்தை வளர்க்கும் பணியைக் கொண்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
உலகிற்கு சாட்சியமளிப்பதற்கு, தமத்திரித்துவத்திலிருந்து பாயும் ஒற்றுமையை நோக்கி நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை மரியன்னை இறையியல் நம்மில் வளர்க்க வேண்டும் என்றும், நம்பிக்கையின் அழகு, அன்பின் பலன், ஏமாற்றம் தராத எதிர்நோக்கின் இறைவாக்கு போன்றவற்றை நம்மில் வளர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
கடவுளின் மறைபொருளையும் வரலாற்றையும் நாம் அன்னை மரியின் உள்ளார்ந்த பார்வையில் சிந்திப்பதால், ஆரோக்கியமற்ற தகவல்கள், கருத்தியல்கள், பரப்புரைகள் போன்றவற்றினால் நமது மனம் சிதவடையாமல் பாதுகாக்கப்படுகின்றோம் என்றும், ஆயுதமற்ற உலகம், இறை அருள் போன்றவற்றிற்கு நம் உள்ளங்களைத் திறக்கின்றது, மக்கள் மற்றும் கலாச்சாரங்கள் அமைதியாக ஒன்றாக நடப்பதை சாத்தியமாக்குகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
திருஅவைக்கு எப்போதும் மரியாவின் முகமும், மரியன்னை செயல்பாடும் தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், மரியியல் கல்வியை திருஅவையின் பணியில் வைக்க விரும்பும் அனைவருக்கும் மரியியல் கல்விக்கழகங்கள் எப்போதும் ஓர் இல்லமாகவும் பள்ளியாகவும் இருக்கட்டும் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்