ஆயுதங்கள் அமைதியாகி, உரையாடலுக்கான பாதைகள் திறக்கப்பட....
மெரினா ராஜ் – வத்திக்கான்
உக்ரைனில் ஆயுதங்கள் அமைதியாகி, உரையாடலுக்கான பாதைகள் திறக்கப்பட வேண்டும் என்று கடவுளிடம் செபிப்பதாக செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 24, ஞாயிறு உக்ரைன் நாட்டின் 34-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு உக்ரைன் அரசுத்தலைவர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
போரின் விளைவுகளால் துன்புறும் மக்களுக்கு ஆறுதல் கூறவும், "காயமடைந்தவர்களை" வலுப்படுத்தவும், "இறந்தவர்களுக்கு நிலையான இளைப்பாறுதலை" வழங்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், நல்லெண்ணம் கொண்ட மக்களின் இதயங்களைத் தூண்டி, அனைவருக்கும் நன்மை பயக்கும்படி கடவுளிடம் மன்றாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நல்லெண்ணம் கொண்ட மக்களின் இதயங்களைக் கடவுள் தூண்டி எழுப்பவும், ஆயுதங்களின் இரைச்சலை அமைதிப்படுத்தவும், உரையாடலுக்கு வழிவகுக்கவும், அனைவரின் நன்மைக்காக அமைதிக்கான பாதையைத் திறக்கவும், எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுவதாக அச்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
உக்ரைன் நாட்டை அமைதியின் அரசியான தூய கன்னி மரியாவிடம் ஒப்படைத்து செபிப்பதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், போரினால் இறந்தவர்களுக்கு இறைவனின் நிலையான இளைப்பாறுதக் கிடைக்கப்பெற செபிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுத்தூதரின் நன்றி செய்தி
திருத்தந்தையின் வாழ்த்துச்செய்திக்கு நன்றி தெரிவித்து, பதிலளிக்கும் வகையில் உக்ரைன் அரசுத்தலைவர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி அவர்கள், தனது X வலைதளப்பக்கத்தில், “பேரழிவு தரும் போரின் மத்தியில் திருத்தந்தையின் ஆழமான வார்த்தைகள் ஆறுதல் அளிக்கின்றன என்றும், அவரது செபம், உக்ரேனிய மக்கள் மீதான அவரது அக்கறை போன்றவற்றிற்காக திருத்தந்தைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து நம்பிக்கைகள் மற்றும் முயற்சிகள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைதியை அடைவதை நோக்கி இயக்கப்படுகின்றன என்றும், நன்மை, உண்மை மற்றும் நீதி மேலோங்குவதற்கான திருத்தந்தையின் தலைமைத்துவம் மற்றும் அப்போஸ்தலிக்க ஆதரவிற்குத் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார் அரசுத்தலைவர் ஜெலன்ஸ்கி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்