வால்டென்சியன் ஆயர் மாமன்றக் கூட்டத்திற்குத் திருத்தந்தையின் செய்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
கிறிஸ்தவர்கள் மனித மாண்பு, நீதி மற்றும் அமைதிக்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும், அனைத்து கிறிஸ்தவர்களும் முழு ஒற்றுமையை நோக்கி இதயப்பூர்வமான நேர்மையுடன் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 23, சனிக்கிழமை முதல் 27, புதன்கிழமை வரை தொரினோவில் உள்ள Torre Pellice என்னும் இடத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வல்தேசா தலத்திருஅவை ஆயர் மாமன்றக் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தியானது, கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவுக்கும் அவரது நற்செய்திக்கும் சான்றளிக்க வேண்டும் என்றும், மனிதகுலத்திற்கான பணியில் மக்கள் அனைவரும் ஒத்துழைக்கவும், குறிப்பாக மனிதனின் மாண்பைப் பாதுகாப்பதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது.
நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பதிலும், பலவீனமானவர்களைத் துன்புறுத்தும் துன்பங்களுக்கு பொதுவான பதில்களை வழங்குவதிலும், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், ஆயர் மாமன்றக் கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் அனைவருக்காக செபிப்பதாகவும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தின் துவக்கத்தில் உரையாற்றிய அருள்பணியாளர் Peter Ciaccio அவர்கள் தலத்திருஅவைகளின் கடினமான பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார். கடவுளைப் பற்றிப் பேசுதல், கடவுளுடனான நமது உறவையும் அதன் தாக்கங்களையும் பற்றிப் பேசுதல், கடவுள் நம்மைக் கண்டுபிடித்து அழைத்தார் என்ற உண்மையைப் பற்றிப் பேசுதல், போன்றவை நம் அண்டை வீட்டாரை ஒடுக்குவதற்காக அல்ல என்றும் கூறினார்.
மாறாக நம் அண்டை வீட்டாருக்கு பணியாற்றுவதற்கும் அவர்களை அன்பு செய்வதற்கும் என்றும் நம்மில் மிகக் குறைந்தவர்களை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு அடித்தளமாக கடவுளுடனான உறவு இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார் அருள்பணியாளர் Peter Ciaccio.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்