திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - காட்டிக்கொடுக்கப்படுதல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இத்தாலியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய புதன் மறைக்கல்வி உரையானது வத்திக்கான் வளாகத்தில் அல்லாமல் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது.
உலகின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருக்க அரங்கத்தின் மேடைப்பகுதியை வந்தடைந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கரமசைத்து மக்களை வாழ்த்தினார். அதன் பின் சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தினைத் துவக்கினார். அதனைத்தொடர்ந்து மாற்கு நற்செய்தியில் உள்ள யூதாசின் சூழ்ச்சி வெளியாகுதல் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
மாற்கு 14:17 -21
மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, “என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, “நானோ?நானோ?” என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், “அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார்.
இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இயேசுவின் பாஸ்கா என்னும் மூன்றாவது தலைப்பின் இரண்டாவது குறுந்தலைப்பில் இயேசு காட்டிக்கொடுக்கப்படுதல் என்னும் கருத்தில் தனது உரையினை வழங்கினார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்கள் இதோ.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
இயேசுவினது வாழ்வின் இறுதி நாள்களில் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நற்செய்தியின் வழியாக நாம் நம் பயணத்தைத் தொடர்வோம். இன்று நாம் நமக்கு ஒரு நெருக்கமான, வியத்தகு, ஆனால் ஆழமான உண்மை காட்சியில் நிறுத்துகிறோம். பாஸ்கா விருந்து உணவின் போது, பன்னிருவரில் ஒருவர் தன்னைக் காட்டிக் கொடுக்கப் போகிறார் என்பதை இயேசு வெளிப்படுத்துகின்றார். “என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மாற்கு 14:18). என்று கூறுகின்றார். உண்மையில் இவை மிக வலிமையான வார்த்தைகள். இயேசு அவர்களைக் கண்டிப்பதற்காக அப்படிச் சொல்லவில்லை, மாறாக அன்பு எவ்வளவு உள்ளது என்பதை எடுத்துரைக்கின்றார். அன்பு உண்மையாக இருக்கும்போது, உண்மைக்கு புறம்பான செய்லகளை செய்ய முடியாது என்பதைக் காட்டுவதற்காக் கூறுகின்றார். சிறிது நாள்களுக்கு முன்பு கவனமாக தயாரிக்கப்பட்ட அவர்கள் இருந்த அந்த மேல் அறையானது, திடீரென்று கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் பாதிப்புகளால் ஆன ஒரு துயரம் நிறைந்த அமைதியால் நிரப்பப்படுகிறது. துரோகத்தின் நிழல் மிகவும் அன்புக்குரிய நம் உறவுகளில் ஊடுருவும்போது, அது நமக்கும் நன்கு தெரிந்த ஒரு துன்பமாகிறது.
இனி நடக்கவிருப்பதைப் பற்றி இயேசு பேசும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் தனது குரலை உயர்த்தவில்லை, அவர் தனது விரலை நீட்டி யூதாஸின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேள்வி கேட்கும் விதத்தில் அவர் பேசுகின்றார். அதேபோல்தான் நடக்கிறது. “சீடர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, “நானோ?நானோ?” என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள் (மாற்கு 14:19).
அன்பான நண்பர்களே, “நானோ?” என்ற இந்தக் கேள்வி நம்மை நாமே கேட்டுக்கொள்ளக்கூடிய மிகவும் நேர்மையான கேள்விகளில் ஒன்றாகும். இது ஒரு அப்பாவியின் கேள்வி அல்ல, ஆனால் தனது சொந்த பலவீனத்தைக் கண்டுபிடிக்கும் சீடனின் கேள்வி. இது குற்றவாளியின் அழுகை அல்ல, ஆனால் தான் அன்பு செய்ய விரும்பினாலும், தான் காயப்படுத்த முடியும் என்பதை அறிந்த ஒருவரின் கிசுகிசுப்பு. இந்த விழிப்புணர்வில்தான் மீட்பின் பயணம் தொடங்குகிறது.
இயேசு அவமானப்படுத்துவதற்காகக் கண்டனம் செய்யவில்லை. அவர் அவர்களைக் காப்பாற்ற விரும்புவதால் உண்மையைப் பேசுகிறார். நாம் ஒவ்வொருவரும் மீட்கப்பட, நாம் அவருடன் இணைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்பவர்களாக, அவரால் அன்பு செய்யப்படுகின்றோம் என்பதை உணர்பவர்களாக இருக்க வேண்டும். மேலும் தீமை என்பது உண்மை தான் ஆனால் அது முடிவல்ல என்பதை உணர்பவர்களாக இருக்கவேண்டும். ஆழமான அன்பின் உண்மையை அறிந்தவர்களால் மட்டுமே துரோகத்தின் காயங்களை ஏற்றுக்கொள்ள முடியும்.
சீடர்களின் எதிர்வினை கோபம் அல்ல, மாறாக சோகம். அவர்கள் கோபப்படவில்லை, வருத்தப்படுகிறார்கள். அவருடைய பாடுகளில் ஈடுபடுவதற்கான உண்மையான சாத்தியத்திலிருந்து எழும் ஒரு துயரம் வருத்தம் அது. மேலும், சீடர்களின் இந்த வருத்தம், சோகம், உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது மனமாற்றத்திற்கான இடமாக மாறுகிறது. நற்செய்தி தீமையை மறுக்கக் கற்றுக்கொடுக்கவில்லை, மாறாக மறுபிறப்புக்கான ஒரு வேதனையான வாய்ப்பாக அதை அங்கீகரிக்கக் கற்றுக்கொடுக்கிறது.
பின்னர் இயேசு நம் மனதைத் தொட்டு சிந்திக்க வைக்கும் ஒரு சொற்றொடரான, மானிடமகனைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார். (மாற்கு 14:21). இவை நிச்சயமாக கடுமையான வார்த்தைகள், ஆனால் அவை சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்: அவை ஒரு சாபம் அல்ல, மாறாக வேதனையின் அழுகை. கிரேக்க மொழியில், "ஐயோ" என்பது ஒரு புலம்பலாக, ஆஹிமே என்னும் நேர்மையான மற்றும் ஆழ்ந்த இரக்கத்தின் ஒரு கூக்குரல் போல ஒலிக்கிறது.
நாம் தீர்ப்பளிக்கப் பழகிவிட்டோம். மறுபுறம், கடவுள் துன்பத்தை ஏற்றுக்கொள்கிறார். அவர் தீமையைக் காணும்போது, அவர் பழிவாங்குவதில்லை, ஆனால் துன்புறுகிறார். அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்பது முன்கூட்டியே விதிக்கப்பட்ட கண்டனம் அல்ல, ஆனால் நாம் ஒவ்வொருவரும் உணரக்கூடிய ஒரு உண்மை. நம்மை உருவாக்கிய அன்பை நாம் மறுத்தால், துரோகம் செய்வதன் மூலம் நாம் நமக்கு விசுவாசமற்றவர்களாக மாறினால், உலகிற்குள் நாம் வந்ததன் அர்த்தத்தை நாம் உண்மையிலேயே இழந்து, மீட்பிலிருந்து நம்மை விலக்கிக் கொள்கிறோம்.
நம் வரம்புகளை நாம் உணர்ந்தால், கிறிஸ்துவின் துயரம் நம்மைத் தொட அனுமதித்தால், இருண்ட இடத்தில், ஒளி அணையாது பிரகாசிக்கத் தொடங்குகிறது. நாம் மீண்டும் பிறக்க முடிகின்றது. நம்பிக்கை பாவத்திலிருந்து நம்மைத் தப்பவிடுவதில்லை, ஆனால் அது எப்போதும் நமக்கு இரக்கம் என்னும் ஒரு வழியை வழங்குகிறது:
நம் பலவீனத்தால் இயேசு அவமதிக்கப்படவில்லை. துரோகத்தின் ஆபத்திலிருந்து எந்த நட்பும் விடுபட்டதல்ல என்பதை அவர் நன்கு அறிவார். இயேசு தொடர்ந்து தனது சீடர்களை நம்புகிறார். அவர்களுடன் பந்தியில் அமர்ந்திருக்கிறார். தன்னைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு கூட அவர் ரொட்டித்துண்டை உடைத்துக் கொடுக்காமல் இல்லை. அதையும் பகிர்ந்துகொள்கின்றார். இது கடவுளின் அமைதியான ஆற்றல், அவர் தனியாக விடப்படுவார் என்பதை அறிந்திருந்தாலும், அவர் ஒருபோதும் அன்பின் பந்தியைக் கைவிடுவதில்லை.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, இன்று நேர்மையுடன் "அது நானோ" என்றுக் நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். குற்றம் சாட்டப்படுவதற்காக அல்ல, மாறாக நம் இதயங்களில் உண்மைக்கான இடத்தைத் திறப்பதற்காக. கடவுள் மீதான நமது நம்பிக்கையை உடைப்பவர்களாக அல்ல, மாறாக அதைச் சேகரிப்பவர்களாகவும், பாதுகாப்பவர்களாகவும், புதுப்பிப்பவர்களாகவும் நாமே இருக்க முடியும் என்ற விழிப்புணர்வு பெறும்போது அங்கே மீட்பு தொடங்குகிறது:
நாம் தோல்வியடைந்தாலும், கடவுள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார் என்பதை அறிவதுதான் எதிர்நோக்கு. நாம் அவரைக் காட்டிக் கொடுத்தாலும், அவர் நம்மை அன்பு செய்வதை ஒருபோதும் நிறுத்த மாட்டார். தாழ்மையான, காயமடைந்த, ஆனால் எப்போதும் உண்மையுள்ள அன்பை அடைய நம்மை நாம் அனுமதித்தால், உண்மையிலேயே மறுபிறப்பு எடுக்க நம்மால் முடியும். காட்டிக்கொடுப்பவர்களாக அல்லாமல், எப்போதும் கடவுளால் அன்பு செய்யப்படும் குழந்தைகளாக வாழத் தொடங்குங்கள்.
இவ்வாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், வெரோனா, மொடெனா, மானெர்பியோ மற்றும் மிலேனாவில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, ஒவ்வொருவரும் நேர்மை, நம்பிக்கை, வாழ்க்கை மற்றும் தூய்மையில் முன்னேற ஊக்குவித்தார்.
ஆகஸ்டு 15, வெள்ளியன்று அன்னை மரியின் விண்ணேற்பு பெருவிழா சிறப்பிக்கப்பட இருப்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், கடவுளுடன் குடும்பமாக இருப்பதற்கான அழைப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மீது அக்கறை கொள்வதில் கன்னி மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, செபிக்க வலியுறுத்தினார்.
இறுதியாக புதுமணத்தம்பதியர், நோயாளிகள் மற்றும் முதியோர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து கூடியிருந்த அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்