திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – இயேசுவின் பாஸ்கா விருந்து
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்பு நேயர்களே “இயேசுவே நமது எதிர்நோக்கு” என்னும் தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட யூபிலி ஆண்டிற்கான மறைக்கல்வி உரையானது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இயேசுவின் குழந்தைப்பருவம், மற்றும் பணிவாழ்வு என்னும் தலைப்புக்களின் கீழ் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்கள் இடம்பெற்று வந்த நிலையில், ஆகஸ்டு 6, புதன்கிழமையன்று அதன் மூன்றாவது தலைப்பாக இயேசுவின் பாஸ்கா என்னும் புதிய தலைப்பில் இறுதி இராவுணவிற்கான ஏற்பாடு என்ற தலைப்பில் தனது கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மக்கள் கூடியிருந்த வத்திக்கான் வளாகத்தில் திறந்த காரில் வந்து அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள் சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
அதன்பின் மாற்கு நற்செய்தியில் உள்ள பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.
மாற்கு 14: 12-16
புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்; “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "‘நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?’ என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.” சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
இறைவார்த்தைகள் எடுத்துரைக்கப்பட்டத்தைத் தொடரந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது கருத்துக்களைத் திருப்பயணிகளிடத்தில் பகிர்ந்து கொண்டார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
கிறிஸ்துவில் நமது எதிர்நோக்கு முழுவடிவம் பெற்று நிலைபெறவும் கிறிஸ்துவின் முகத்தைக் கண்டறியவும் உதவும் வகையில் நமது யூபிலிப் பயணத்தினைத் தொடர்வோம். இன்று நாம் இயேசுவின் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பு பற்றி சிந்திக்க இருக்கின்றோம். எனவே மிகவும் எளிமையான வார்த்தையும், கிறிஸ்தவ வாழ்க்கையின் விலைமதிப்பில்லாத இரகசியத்தை நோக்கி நம்மை வழிநடத்தும் வார்த்தையான “ஏற்பாடு" (தயார் நிலை) என்பது குறித்து சிந்திக்க ஆரம்பிப்போம்.
மாற்கு நற்செய்தியில், புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில், பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர்கள் அவரிடம், “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.” (மாற்கு 14:12) என வாசிக்கிறோம். இது ஒரு நடைமுறை கேள்வி, ஆனால் எதிர்பார்ப்பு நிறைந்த கேள்வியும் கூட. முக்கியமான ஒன்று நடக்கவிருக்கிறது என்று சீடர்கள் உணர்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு என்ன நடக்க இருக்கின்றது என்ற விவரங்கள் தெரியவில்லை. இயேசுவின் பதில் ஏறக்குறைய ஒரு புதிர் போல் தெரிகிறது. “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார்” என்று இயேசு கூறும் விவரங்கள் அவர்களுக்கு அடையாளமாகின்றன. மண்குடத்தில் தண்ணீர் சுமந்து செல்லுதல் என்பது அக்காலத்தில் பெண்களால் வழக்கமாகச் செய்யப்படும் ஒரு பணி. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மேல் மாடியில் ஓர் அறை மற்றும் அந்த வீட்டிற்கு உரிமையாளரான அறிமுகமில்லாத அந்த நபர், இவை எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது போல் இருக்கிறது. உண்மையில், அதுதான் நடந்தது. மாற்கு நற்செய்தியானது, அன்பு என்பது தற்செயலான விளைவு அல்ல, மாறாக விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் விளைவு என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறது.
"ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட மேல் அறையானது", கடவுள் எப்போதும் நமக்கு முன்னால் இருக்கிறார் என்று எடுத்துரைக்கின்றது. நமக்கு வரவேற்பு தேவை என்பதை நாம் உணரும் முன்பே, நம்மை அடையாளம் கண்டுகொள்ளவும், நாம் அவருடைய நண்பர்கள் என்று உணரவும் கூடிய ஓர் இடத்தை கடவுள் ஏற்கனவே நமக்காக ஏற்பாடு செய்துள்ளார். அந்த இடம், நம் இதயம். அந்த இதயம் என்னும் "அறை", காலியாகத் தோன்றலாம், ஆனால் அது அங்கீகரிக்கப்படவும், நன்மையால் நிரப்பப்படவும், போற்றப்படவும் காத்திருக்கிறது. சீடர்கள் ஏற்பாடு செய்ய வேண்டிய பாஸ்கா, உண்மையில் இயேசுவின் இதயத்தில் ஏற்கனவே தயாராக உள்ளது. எல்லாவற்றையும் சிந்தித்து, எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து, எல்லாவற்றையும் தீர்மானித்தவர் அவரே. இருப்பினும், அவர் தனது நண்பர்களாகிய சீடர்கள் தங்கள் பங்கைச் செய்யும்படி கேட்கிறார். இது நமது ஆன்மிக வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றை நமக்குக் கற்பிக்கிறது.
அன்று போலவே இன்றும், ஓர் இரவு உணவை நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். இது வழிபாட்டு முறை மட்டுமல்ல, நம்மை மீறிய ஒரு செயலில் நுழைய நாம் தயாராக இருப்பதாகும். நற்கருணையானது பலிபீடத்தில் மட்டுமல்லாது, எல்லாவற்றையும் ஒரு காணிக்கையாகவும் நன்றி செலுத்துதலாகவும் கருதி வாழும், அன்றாட வாழ்க்கையிலும் கொண்டாடப்படுகிறது. நன்றி செலுத்துதலைக் கொண்டாட, ஏற்பாடு செய்தல் என்பது அதிகமாகச் செய்வதைக் குறிக்காது, ஆனால் அதற்கான ஓர் இடத்தை உருவாக்குவதைக் குறிக்கிறது. அதாவது குழப்பங்களை நீக்குதல், எதிர்பார்ப்புகளைக் குறைத்தல் மற்றும் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை வளர்ப்பதை நிறுத்துதல் போன்றவற்றிற்கான இடத்தை உருவாக்குதலாகும். உண்மையில், பெரும்பாலும், நாம் ஏற்பாடுகளை மாயைகளுடன் குழப்புகிறோம். மாயைகள் நம்மை திசைதிருப்புகின்றன, ஏற்பாடுகள் நம்மை வழிநடத்துகின்றன. மாயைகள் ஒரு முடிவைத் தேடுகின்றன, ஏற்பாடுகள் ஒரு சந்திப்பை உறுதியாக்குகின்றன. உண்மையான அன்பு, அது பரிமாறப்படுவதற்கு முன்பே கொடுக்கப்படுகிறது, அது ஒரு எதிர்பார்க்கப்பட்ட பரிசு. அது பெறுவதை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக பிறருக்கு வழங்க விரும்புவதை அடிப்படையாகக் கொண்டது. இயேசு தம் சீடர்களிடம் அனுபவித்தது இதுதான். அவர்கள் அவரைப் புரிந்துகொள்ளாதபோதும், அவர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தபோதும், மற்றொருவர் அவரை மறுக்கவிருந்தபோதும், அவர் அவர்கள் அனைவருக்குமான ஒரு கூட்டு விருந்தை ஏற்பாடு செய்தார்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, நாமும் வழிபாட்டு முறையால் மட்டுமல்ல, நம் வாழ்வின் ஒவ்வொரு செயலாலும், "ஆண்டவருடைய பாஸ்காவை ஏற்பாடு செய்ய" அழைக்கப்படுகிறோம். நமது ஒவ்வொரு செயல்கள், நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு இலவசச் செயல்கள், முன்கூட்டியே வழங்கப்படும் மன்னிப்பு, பொறுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முயற்சி போன்றவை அனைத்தும் கடவுள் வாழும் இடத்தைத் தயாரிப்பதற்கான ஒரு வழியாகும். நமது வாழ்க்கையின் எந்தப் பகுதிகளைக் கடவுளை வரவேற்பதற்குத் தயாராக இருக்க நாம் மறுசீரமைக்க வேண்டும்? இன்று என்னைப் பொறுத்தவரையில், ஏற்பாடு செய்தல்" என்றால் என்ன? என நமக்குள் நாமே கேள்விகளைக் கேட்டுக்கொள்வோம்.
கடவுளுடனும், நம்மிடையேயும் ஒற்றுமைக்கான இடத்தைத் தயார் செய்வதற்கான அழைப்பை நாம் ஏற்றுக்கொண்டால், எல்லையற்ற அன்பின் மறைபொருள் கடவுளுக்கான அறையை நோக்கி நம்மை வழிநடத்தும். மேலும் கடவுளின் அந்த அறையானது எப்போது இடைவிடாமல் கொண்டாடப்பட்டு, நம்மைத் தாங்கி, எப்போதும் நமக்கு முன்னால் இருக்கும் அந்த விசாலமான மற்றும் தயாராக இருக்கும் அறையாக, அடையாளங்கள், சந்திப்புகள் மற்றும் வார்த்தைகளால் சூழப்பட்டிருக்கும் அறையாக இருப்பதைக் காண்கிறோம். கடவுளுடைய உடனிருப்பிற்குப் பணிவான தயாரிப்பாளர்களாக இருக்கக் கடவுள் நமக்கு அருள்பொழிவாரக. இத்தகைய நமது அன்றாட விருப்பத்தில் அமைதியான நம்பிக்கை நம்மில் வளரட்டும், எல்லாவற்றையும் சுதந்திரமான இதயத்துடன் எதிர்கொள்ள அனுமதிக்கட்டும். ஏனெனில் அன்பு தாயார் செய்யப்பட்டிருக்கும் இடத்தில், வாழ்க்கை உண்மையிலேயே செழித்தோங்க முடியும்.
இவ்வாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது கருத்துக்களை எடுத்துரைத்ததும் கூடியிருந்த திருப்பயணிகளை வாழ்த்தினார். கிறிஸ்துவின் உருமாற்ற விழாவைக் கொண்டாடும் வேளையில், கடவுளுடைய ஒளிரும் முகம் நமக்கு நம்பிக்கை மற்றும் ஆறுதலின் ஆதாரமாக இருக்கட்டும் என்று வாழ்த்தினார் திருத்தந்தை. ஹிரோசிமா நாகசாகி அணுகுண்டுத்தாக்குதல் ஏற்பட்ட 80-ஆவது ஆண்டினை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்காகவும் அவர்களை இழந்த குடும்பத்தாருக்காகவும் செபித்தார்.
இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்