புனித பூமியில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
புனித பூமியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் மற்றும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் ஒரு வலுவான வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 27,புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
கடந்த ஆகஸ்டு 22, வெள்ளிக்கிழமை உலகெங்கும் போரினால் பாதிக்கப்படும் மக்களை நினைவுகூர்ந்து, செபம் மற்றும் நோன்பிற்கான நாளாக சிறப்பிக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், ஆகஸ்டு 27, புதனன்றும் தனது உறுதியான வேண்டுகோளை போர் மற்றும் மோதல்களை நிறுத்துவதற்காக எடுத்துரைத்தார்.
அதிகமான அளவு, பயங்கரவாதம், அழிவு மற்றும் மரணத்தை ஏற்படுத்தியுள்ள இப்போரானது விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அனைத்து பிணையக்கைதிகளை விடுவிக்கவும், நிரந்தர போர்நிறுத்தம் அடையவும் கேட்டுக்கொண்டார்.
மனிதாபிமான உதவிகளை மக்கள் பாதுகாப்பாக அணுகுவதை எளிதாக்க வேண்டும் என்றும், மனிதாபிமான சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும், அதிலும், குறிப்பாக பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமை வலுப்பெறவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கூட்டு தண்டனை, கண்மூடித்தனமான முறைகேடுகள், வன்முறை மற்றும் மக்களை கட்டாயமாக இடம்பெயர்த்தல் போன்றவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
மக்களுக்கு எதிரான இந்த வன்முறைச் சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும், மக்களின் பொது நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும் ஆகஸ்டு 26, செவ்வாயன்று அழைப்பு விடுத்த எருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மற்றும் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்களின் கூட்டு அறிக்கையோடு தானும் இணைந்து அமைதியை வலியுறுத்துவதாகக் கூறினார் திருத்தந்தை.
இறுதியாக, அமைதி, ஆறுதல் மற்றும் எதிர்நோக்கின் அரசியான அன்னை மரியாவிடம் உலக மக்களுக்காக செபிக்கக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், அனைவருக்கும் மிகவும் விருப்பமான புனித பூமியில் அமைதி நிலவ இறைவனின் பரிந்துரையை அன்னை மரியா நமக்கு பெற்றுத்தரட்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்