MAP

வில்லனோவாவின் அகுஸ்தீனிய மாநிலத்திற்கு திருத்தந்தை செய்தி

புனித அகுஸ்தினாரின் சாட்சிய வாழ்வு ஒவ்வொரு கிறிஸ்தவரையும், கடவுள் தங்களுக்குத் தந்த கொடைகளை உணர்ந்து, அதை “அன்பான சேவையாக கடவுளுக்கும் அருகிலிருப்பவர்களுக்கும் அர்ப்பணிக்க” அழைப்பு விடுக்கிறது - திருத்தந்தை 14 ஆம் லியோ.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான் 

நம் சொல்லிலும் செயலிலுமிருந்தே அமைதி தொடங்குகிறது என்று புனித அகுஸ்தினாரின்  பெருவிழாவை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள  வில்லனோவாவின் புனித தாமஸின் அகஸ்தீனிய மாநிலத்திற்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்   திருத்தந்தை 14 ஆம் லியோ.

புனித அகுஸ்தினாரின்   பெருவிழாவைக் குறிக்கும் வகையில், புனித அகுஸ்தீன் பதக்கம் வழங்கப்பட்டதற்கு தனது காணொளிச் செய்தியில் நன்றி தெரிவித்த திருத்தந்தை அவர்கள், அகுஸ்தீனிய  துறவியும், ஆயருமான "ஏழைகளின் தந்தை" என்று நினைவுகூரப்படும் வில்லனோவாவின் புனித தாமஸ் அவர்களுக்கு அத்தலத்திருஅவை அர்ப்பணிக்கப்பட்டுள்ளதையும்   நினைவு கூர்ந்துள்ளார்.

தான் ஒரு அகுஸ்தீனியராக  அங்கீகரிக்கப்படுவதில்  மிகுந்த பெருமை அடைவதாகவும், தன்  வாழ்வில்  புனித அகுஸ்தீனின் உள்ளுயிர் மற்றும் படிப்பினைகளுக்கு மிகுந்த கடன் பட்டுள்ளதாகவும் தனது செய்தியில் கூறியுள்ளார்  திருத்தந்தை.

உண்மை, அன்பு, ஒன்றிப்பு ஆகியவற்றின் மதிப்புகளுக்கு  பல வழிகளில் ஆழ்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதற்காக, அவர்கள் அனைவருக்கும்  நன்றியுள்ளவராக இருப்பதாகவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

நம்  ஒவ்வொருவருடைய   சொந்த வாழ்க்கையைப் போலவே புனித அகுஸ்தீன் அவர்களின் வாழ்க்கையும் சோதனைகள் மற்றும் பிழைகளால் நிறைந்தது என்றும், இருப்பினும், அவரது தாய் புனித மோனிகாவின் இடைவிடாத இறைவேண்டல்  மற்றும் அவரைச் சுற்றியுள்ள சமூகத்தின்  சான்றுகள் வழியாக, அவர் "அவரது அமைதியற்ற இதயத்திற்கு அமைதிக்கான வழியை" கண்டுபிடித்தார் என்றும் திருத்தந்தை தனது செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

புனித அகுஸ்தினாரின்  சாட்சிய வாழ்வு  ஒவ்வொரு கிறிஸ்தவரையும், கடவுள் தங்களுக்குத் தந்த கொடைகளை  உணர்ந்து,  அதை “அன்பான சேவையாக கடவுளுக்கும் அருகிலிருப்பவர்களுக்கும் அர்ப்பணிக்க” அழைப்பு விடுக்கிறது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“உங்கள் இதயத்தில் செவிகளை வைத்திருங்கள்; உங்கள் செவிகளில் இதயத்தை வைத்துக்கொள்ளாதீர்கள்” என்ற புனித அகுஸ்தினாரின் வார்த்தையாய் மேற்கோள் காட்டி “பேசுவதற்கு முன் கேட்க வேண்டும்,” என்றும், ஒருங்கியக்கத் திருஅவை தூய ஆவியாரின் குரலையும் குறிப்பாக, ஏழைகளின் குரலையும் கேட்கவும் அழைப்பு விடுப்பத்தையும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

இந்த உலகின் சத்தத்தையும் பிளவுகளையும் விலக்கி, கடவுளின் அன்பான குரலைக் கேட்க வேண்டும் என்றும், அதுவே அமைதியை அளிக்கும் என்று கூறியுள்ள திருத்தந்தை, கடவுளின்  ஆறுதலான குரலைக் கேட்டு, அக்குரலை  இவ்வுலகத்தோடு  பகிர்ந்து, கிறிஸ்துவில் ஒன்றுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  

இறுதியாக, நல்ல ஆலோசனை அன்னையின் பாதுகாப்பில் புனித அகுஸ்தீனியக் குழுமத்தை ஒப்படைத்து தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கி காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஆகஸ்ட் 2025, 14:07