திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - யாரைத் தேடுகிறீர்கள்?
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆகஸ்டு 27, புதன்கிழமையன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு “யாரைத் தேடுகிறீர்கள்?” என்ற தலைப்பில் தனது புதன் மறைக்கல்வி உரைக்கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தினை திருத்தந்தை அவர்கள் துவக்கி வைத்ததும், யோவான் நற்செய்தியில் இயேசுவைக் கைது செய்தல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
யோவான் 18: 4-9
தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று, “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள். இயேசு, “நான்தான்” என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான். ‘நான்தான்’ என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள். “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “‘நான்தான்’ என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். “நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை” என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.
இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார்.
அன்பான சகோதர சகோதரிகளே,
இன்று நாம் இயேசுவின் பாடுகளின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு காட்சியில் கவனம் செலுத்த இருக்கின்றோம். அது ஒலிவத் தோட்டத்தில் அவர் கைது செய்யப்பட்ட நிகழ்வை எடுத்துரைக்கும் காட்சி. நற்செய்தியாளர் யோவான், தனது வழக்கமான ஆழமான பார்வையுடன், பயந்து ஓடிப்போகின்ற அல்லது ஒளிந்து கொள்கின்ற இயேசுவை நமக்கு முன்வைக்கவில்லை. மாறாக, அவர் முன்னோக்கித் துணிவுடன் சென்று பேசும் ஒரு சுதந்திர மனநிலை கொண்ட மனிதனை இயேசுவை நமக்குக் காட்டுகிறார், மிகப்பெரிய அன்பின் ஒளி வெளிப்படும் நேரத்தை இதன் வழியாக அடையாளப்படுத்துகிறார்.
“இயேசு, தனக்கு நிகழ இருப்பது அனைத்தையும் முன்னரே அறிந்து, முன்னோக்கிச் சென்று, ‘யாரைத் தேடுகிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்டார்” (யோவான் 18:4). இயேசுவுக்குத் தெரியும் அவர்கள் தேடி வந்திருப்பது தன்னைத் தான் என்று. இருப்பினும், அவர் பின்வாங்க வேண்டாம் என்று முடிவு செய்கிறார். பலவீனத்தால் அல்ல, மாறாக அன்பினால் அவர் தன்னைக் கையளிக்கின்றார். அவரது அன்பு நிராகரிப்புக்கு அஞ்சாத அளவுக்கு முழுமையான, மிகவும் முதிர்ச்சியடைந்த ஓர் அன்பு. அவர் பிறரால் பிடிபட விரும்பவில்லை. மாறாக, அவர் தன்னையேக் கையளிக்கின்றார். தன்னை அவர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார். அவர் கைது செய்யப்படும் ஓர் ஆளாக தன்னைப் பலியாக்கவில்லை. மாறாக, கொடையாகத் தன்னை அளிக்கும் ஆசிரியராகத் தலைவராக விளங்குகின்றார். இயேசுவின் இச்செயலே நமது மனிதகுலத்திற்கான மீட்பின் நம்பிக்கையை உருவாக்குகின்றது. வாழ்வின் இருண்ட நேரத்தில் கூட, நாம் இறுதிவரை முழுமன விடுதலையுடன் பிறரை அன்பு செய்பவர்களாக நாம் இருக்க முடியும் என்பதை அறிய வைக்கின்றது.
"நான் தான்" என்று இயேசு பதிலளிக்கும்போது, வீரர்கள் பின்வாங்கி தரையில் விழுகிறார்கள். பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் "நான் இருக்கிறேன்." இருக்கின்றவராக இருப்பவர் நானே என்று பலமுறை தன்னை, தன் பெயரை வெளிப்படுத்தியதை நினைவுபடுத்துகிறது. மனிதகுலம் அநீதி, பயம் மற்றும் தனிமையை அனுபவிக்கும் இடத்தில் கடவுளின் பிரசன்னம் உடனிருப்பு துல்லியமாக வெளிப்படுகிறது என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார். இருளின் ஆதிக்கத்தால் மூழ்கடிக்கப்படுமோ என்ற பயமின்றி உண்மையான ஒளி பிரகாசிக்கத் தயாராக இருப்பது அங்குதான் என்பதை எடுத்துரைக்கின்றார்.
எல்லாவற்றையும் இழந்து தன்னை விட்டு எல்லாரும் ஓடிப்போக இருக்கும் அந்த நடுஇரவின் போது, கிறிஸ்தவ நம்பிக்கை என்பது தப்பித்து செல்லுதல் அல்ல, மாறாக முடிவு என்பதை இயேசு காட்டுகிறார். இயேசுவின் இந்த மனப்பான்மை ஆழ்ந்த செபத்தின் பலனாக அவருக்குக் கிடைக்கின்றது. நமது துன்பத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்படி கடவுளிடம் கேட்காது, அன்பில் விடாமுயற்சியுடன் இருக்க நமக்கு பலத்தைத் தருமாறு கேட்போம். அன்பிற்காக கொடையாகப் பிறருக்கு வழங்கப்படும் வாழ்க்கையை யாராலும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
“நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” (யோவான் 18:8). என்று கூறும் இயேசு, தான் கைது செய்யப்பட்ட தருணத்தில், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை என்பதை எடுத்துரைக்கின்றார். தனது நண்பர்களான சீடர்களை அவர்கள் கைது செய்யக்கூடாது மாறாக விட்டு விட வேண்டும் என்று விரும்புகிறார். அவரது தியாகம் நிறைந்த இச்செயல் ஓர் உண்மையான அன்பின் செயல் என்பதைக் காட்டுகிறது. இயேசு தம் சீடர்களைக் காவலர்கள் விட்டுவிட வேண்டும் என்பதற்காக மட்டுமே தன்னை அவர்கள் அழைத்துச் சென்று சிறையில் அடைக்க அனுமதிக்கிறார்.
தனது வாழ்வின் இறுதிக் கட்டமான வியக்கத்தகுந்த மற்றும் உன்னதமான நேரத்திற்காகத் தன்னைத் தயார்படுத்துவதற்காக இயேசு தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்தார். எனவே, அச்சூழல் அவரை நோக்கி வரும்போது, அதிலிருந்து தப்பிக்கும் வழியைத் தேடாமல் இருக்க மன வலிமை பெறுகின்றார். அன்பிற்காக உயிரை இழப்பது என்பது தோல்வி அல்ல, மாறாக அது ஒரு மறைவான பலனைக் கொண்டுள்ளது என்பதை அவரது இதயம் நன்கு அறிந்திருந்தது. தரையில் விழும் கோதுமை மணியைப் போல, இறந்து பலனளிக்கும் என்பதை தனது வாழ்வால் வெளிப்படுத்துகின்றார்.
இறப்பிற்கும் வாழ்வின் எல்லைக்கும் மட்டுமே வழிவகுக்கும் ஒரு பாதையை எதிர்கொள்ளும்போது இயேசுவும் கவலைப்படுகிறார். ஆனால் அந்த பாதையில் அன்பிற்காக இழந்த வாழ்க்கை மட்டுமே இறுதியில் காணப்படுகிறது என்பதில் சமநிலையான மனம்கொண்டு அதில் உறுதியாக இருக்கிறார். துன்பத்தைத் தவிர்க்க முயற்சிப்பதில் அல்ல, ஆனால் மிகவும் அநீதியான துன்பத்தின் இதயத்தில் கூட, புதிய வாழ்க்கையின் விதை மறைந்துள்ளது என்று நம்புவதில் தான் உண்மையான எதிர்நோக்கு அடங்கியுள்ளது.
நாம் தனியாக இருக்கிறோம் என்பதை உணராமல் எத்தனை முறை, நம் வாழ்க்கையை, நம் திட்டங்களை, நம் செயல்பாடுகளை, பாதுகாப்பை எதிர்த்து செயல்படுகின்றோம். பிறருக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டவை மட்டுமே செழித்து வளரும், அனைத்தும் இழந்ததாகத் தோன்றினாலும் நிபந்தனையற்ற அன்பு மட்டுமே நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்ற வேறுபட்ட கருத்துக்களை நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கின்றது.
மாற்கு நற்செய்தியாளர், இயேசு கைது செய்யப்பட்டபோது ஆடைகளைக் களைந்துவிட்டு பிறந்த மேனியாய் ஓடிப்போன ஓர் இளைஞரைப் பற்றி நமக்குச் சொல்கிறார்.(மாற்கு 14:51). இந்நிகழ்வு ஓர் ஆழமாக கருத்தை நம் உள்ளத்தில் தூண்டுகிறது. இயேசுவைப் பின்பற்றும் முயற்சியில், நாமும் அவரைப்போல சில சமயங்களில் ஆடையின்றியும் பிடிபட்டும் இருக்கின்ற சூழல்களை, தருணங்களை அனுபவிக்கிறோம். அன்பு என்பது சாத்தியமற்ற பயணம் போல் தோன்றுவதால், நற்செய்தியின் வழியைக் கைவிட நாம் சோதிக்கப்படும் மிகவும் கடினமான தருணங்களாக இவை கருதப்படுகின்றன.
இருப்பினும், நற்செய்தியின் முடிவில், கல்லறையின் மேல் அமர்ந்திருக்கும் ஓர் இளைஞர் தான் பெண்களுக்கு உயிர்ப்பின் செய்தியை அறிவிக்கிறார். அவர் ஆடையின்றி இல்லை மாறாக வெண்ணிற ஆடை அணிந்தவராக இருக்கின்றார்.
இதுதான் நமது எதிர்நோக்கின் நம்பிக்கை: நமது பாவங்களும் நமது தயக்கங்களும் கடவுள் நம்மை மன்னிப்பதிலிருந்தும், மற்றவர்களுக்காக நம் உயிரைக் கொடுக்க உதவும் வகையில் கடவுளைப் பின்பற்றுவதற்கான நமது விருப்பத்தை மீட்டெடுப்பதிலிருந்தும் நம்மைத் தடுக்காது என்னும் நம்பிக்கையை நமக்கு வழங்குகின்றது.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, இறைத்தந்தையின் நல்லெண்ணத்திற்கு நம்மை அர்ப்பணிக்கக் கற்றுக்கொள்வோம், நமது வாழ்க்கையை, நாம் பெற்ற நன்மைக்கான பிரதிலனாகக் கருதுவோம். வாழ்க்கையில், எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சுதந்திரமாக அன்பு செய்ய ஒவ்வொரு நாளையும் தேர்ந்தெடுப்பதே போதுமானது. இதுவே உண்மையான எதிர்நோக்கு. சோதனையின் இருளில் கூட, கடவுளின் அன்பு நம்மைத் தாங்கி, நிலையான வாழ்வின் பலனை நம்மில் முதிர்ச்சியடையச் செய்கிறது என்பதை அறிவோம்.
இவ்வாறு திருத்தந்தை அவர்கள் தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். விண்ணக்கத்தந்தை நோக்கிய செபத்திற்குப் பின் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அனைவருக்கும் வழங்கினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்