MAP

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - மன்னிப்பு

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் ஆகஸ்டு 20, புதன்கிழமையன்று மன்னிப்பு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசு கிறிஸ்துவே நமது எதிர்நோக்கு என்னும் யூபிலி ஆண்டு புதன் பொது மறைக்கல்வி உரையின் மூன்றாம் குறுந்தலைப்பாக இயேசுவின் பாஸ்கா என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்து வரும் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் ஆகஸ்டு 20, புதன்கிழமையன்று அதன் தொடர்ச்சியாக மன்னிப்பு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.

ஆகஸ்டு 19 செவ்வாய்க்கிழமை மாலை காஸ்தல் கந்தோல்போ திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லத்தில் இருந்து திரும்பிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஆகஸ்டு 20, புதனன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த மக்களை வாழ்த்தியபடி அரங்கத்தின் மேடைப்பகுதியினை வந்தடைந்தார். சிலுவை அடையாளம் வரைந்து மறைக்கல்வி உரைக்கூட்டத்தினைத் திருத்தந்தை அவர்கள் துவக்கியதும் யோவான் நற்செய்தியில் உள்ள இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவுதல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு  ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

யோவான் 13: 1-5

சீடரின் காலடிகளைக் கழுவுதல்

பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை அவர்கள் தனது கருத்துக்களை மக்களுக்கு வழங்கினார் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே,

இன்று நாம் நற்செய்தியில் மிகவும் அதிர்ச்சியூட்டுகின்ற மற்றும் ஒளியூட்டுகின்ற அடையாளச்செயல்களில் ஒன்றைப் பற்றி சிந்திக்க இருக்கின்றோம். இயேசு, இறுதி இராவுணவின்போது, தன்னைக் காட்டிக் கொடுக்கப் போகிறவருக்கு ஒரு அப்பத்துண்டை வழங்கும் தருணமானது பகிர்வதற்கான ஓர் அடையாளம் மட்டுமல்ல அதைவிட அதிகமான ஒன்றான, தன்னை சீடர்கள் கைவிட்டு விடாமல் இருப்பதற்கான அன்பின் கடைசி முயற்சியாகும்.

நற்செய்தியாளர் யோவான், தனது ஆழ்ந்த ஆன்மிக உணர்திறனுடன், அந்நிகழ்வை நமக்கு விவரிக்கிறார். “இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்திய இயேசு சீடரின் காலடிகளைக் கழுவினார் என்று எடுத்துரைக்கின்றார் (யோவான் 13:1-2). இறுதிவரை அன்பு செலுத்துதல் என்பது கிறிஸ்துவின் இதயத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல். நிராகரிப்பு, ஏமாற்றம், நன்றியின்மைக்கு முன்னால் நிற்காத நிலையான அன்பு இயேசுவின் அன்பு.

இயேசுவுக்கு அவரது நேரம் தெரியும், ஆனால் அவர் அதை எண்ணி வருந்தவில்லை, மாறாக அதனை அவர் தேர்ந்தெடுக்கிறார். தனது அன்பானது, மிகவும் வேதனையான காயத்தை, துரோகத்தின் வழியாகக் கடந்து செல்ல வேண்டும் என்ற சூழலை அவர்தான் அங்கீகரிக்கிறார். பின்வாங்குதல், குற்றம் சாட்டுதல், தன்னைத் தற்காத்துக் கொள்ளுதல் போன்றவற்றிற்குப் பதிலாக, அவர் தொடர்ந்து அவர்களை அன்பு செய்கின்றார். அவர்களின் காலடிகளைக் கழுவுகிறார், அப்பத்துண்டை திராட்சை இரசத்தில் நனைத்து  அவர்களுக்கு கொடுக்கின்றார்.

“நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” (யோவான் 13:26) என்று தன்னைக் காட்டிக்கொடுப்பவன் யாரென அறிவிக்கின்றார் இயேசு. இந்த எளிய மற்றும் தாழ்மையான செயல்களின் வழியாக, இயேசு தனது அன்பை முன்னோக்கியும் அதன் ஆழத்திற்கும் கொண்டு செல்கிறார். என்ன நடக்கிறது என்பதை புறக்கணிப்பதற்காக அல்ல, மாறாக என்ன நடக்கின்றது என்பதைத் தெளிவாக, துல்லியமாகக் காண்பதால் அவ்வாறு செய்கின்றார். தீமையில் நாம் தொலைந்து போனாலும், மற்றவரின் சுதந்திரத்தை, மென்மையான அடையாளச் செயல்களின் ஒளியால் அடைய முடியும் என்பதை வலியுறுத்துகின்றார். ஏனெனில் உண்மையான மன்னிப்பு மனந்திரும்புதலுக்காகக் காத்திருக்காது, மாறாக, ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே, இலவசமாக கொடையாக வழங்கப்படுகிறது என்பதை தனது செயல்களால் எடுத்துரைக்கின்றார்.

இயேசுவின் இத்தகைய மனநிலையானது, யூதாசிற்குப் புரியவில்லை. “அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்” (வசனம் 27) என்று நற்செய்தி கூறுகிறது. அந்த அப்பத்துண்டு தான் நமது மீட்பு. அன்பான சகோதர சகோதரிகளே, கடவுளை நாம் நிராகரிக்கும் நேரத்தில் கூட, கடவுள் நம்மை அடைவதற்காக எல்லாவற்றையும் - முற்றிலும் எல்லாவற்றையும் நமக்காகச் செய்கின்றார் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கின்றது.

இங்குதான் மன்னிப்பு அதன் அனைத்து ஆற்றலிலும் தன்னை வெளிப்படுத்துகிறது மற்றும் நம்பிக்கையின் உறுதியான முகத்தை வெளிப்படுத்துகிறது. அது மறதியோ, பலவீனமோ அல்ல. மற்றவர்களை இறுதிவரை அன்பு செய்கின்ற அதே வேளையில், மற்றவரை விடுவிக்கும் திறனும் கொண்டது. இயேசுவின் அன்பு துயரத்தின் உண்மையை மறுக்காது. அதே வேளையில், தீமையானது கடைசி வார்த்தையாகவும் இருக்க அனுமதிக்காது. இயேசு நமக்காக நிறைவேற்றும் மறைபொருள் இதுதான், இம்மறைபொருளில் நாமும் சில நேரங்களில் பங்கேற்க அழைக்கப்படுகிறோம்.

எத்தனை உறவுகள் உடைகின்றன, எத்தனை வாழ்க்கைக் கதைகள் சிக்கலாகின்றன, பேசப்படாத எத்தனை வார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எல்லாம் சரிசெய்ய முடியாத அளவுக்கு சமரசம் செய்யப்பட்டதாகத் தோன்றினாலும், தொடர்ந்து அன்பு செய்வதற்கு எப்போதும் ஒரு வழி இருக்கிறது என்பதை நற்செய்தி நமக்குக் காட்டுகிறது. மன்னிப்பது என்பது தீமையை மறுப்பதல்ல, மாறாக அது மேலும் தீமையை உருவாக்குவதைத் தடுப்பதாகும். எதுவும் நடக்கவில்லை என்று சொல்வதல்ல, மாறாக, மனக்கசப்பு எதிர்காலத்தைத் தீர்மானிக்காதபடி எல்லாவற்றையும் செய்வது.

யூதாசு அறையை விட்டு வெளியேறும்போது, அது இரவு நேரம்" (வசனம் 30) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "அவன் வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார் “(வசனம் 31) என்று கூறுகிறார். இரவு இன்னும் இருக்கிறது, இருப்பினும் ஓர் ஒளி ஏற்கனவே பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது. கிறிஸ்து இறுதிவரை உண்மையுள்ளவராக இருப்பதால் அது அவரில் பிரகாசிக்கிறது, ஏனெனில் அவரது அன்பு வெறுப்பை விட வலிமையானது.

அன்பான சகோதர சகோதரிகளே, ஏமாற்றத்தின் இரவுகள், யாரோ ஒருவர் நம்மை காயப்படுத்திய அல்லது காட்டிக் கொடுத்த இரவுகள், என நாமும் வேதனையான மற்றும் கடினமான பல இரவுகளை அனுபவிக்கிறோம். அந்த நேரங்களில், சோதனையானது நம்மை மூடிக்கொள்கிறது, சூழ்ந்துகொள்கின்றது, தீமையைத் தருகின்றது. அந்நிலையில் கடவுள், எப்போதும் வேறு வழி இருக்கிறது என்ற நம்பிக்கையை நமக்குக் காட்டுகிறார். நம்மைப் புறக்கணிப்பவர்களுக்குக் கூட ஓர் உணவுத் துண்டை நம்மால் வழங்க முடியும் என்று அவர் நமக்குக் கற்பிக்கிறார். நம்பிக்கையின் அமைதியுடன் நாம் அச்சூழலுக்குகுப் பதிலளிக்க முடியும். அன்பை விட்டுக்கொடுக்காமல் மாண்புடன் முன்னேற முடியும் என்று வலியுறுத்துகின்றார்.

பிறரால் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும்போது, பிறரால் கைவிடப்பட்டதாக உணரும்போது, எப்படி அவர்களை மன்னிப்பது என்பதை அறிவதற்கான அருளை இன்று நாம் இறைவனிடம் கேட்போம். இயேசு நமக்குக் கற்பிப்பது போல, அன்பு செலுத்துவது என்பது மற்றவரை சுதந்திரமாக விட்டுவிடுவது.

காட்டிக் கொடுத்தல், காயமடைதல், சுதந்திரமற்ற நிலையில் கூட இருளின் ஏமாற்றத்திலிருந்து பறிக்கப்பட்டு நன்மையின் ஒளிக்கு நம்மால் திரும்ப முடியும் என்று தொடர்ந்து நம்பிக்கை கொள்ள வலியுறுத்துகின்றார் இயேசு.

மன்னிப்பு என்ற ஒளி இதயத்தின் ஆழமான விரிசல்கள் வழியாக வடிந்துவெளியேறினால் அது ஒருபோதும் பயனளிக்காது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மன்னிப்பு அதனை மற்றவர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், பயனற்றதாகத் தோன்றினாலும், மன்னிப்பு அளிப்பவர்களை விடுவிக்கிறது. மனக்கசப்பைக் கரைத்து, அமைதியை மீட்டெடுக்கிறது, நம்மை நம்மிடமே திருப்பித் தருகிறது.

அப்பத்துண்டை வழங்கும் எளிய செயலானது, மீட்பிற்கான வாய்ப்பாக மாறும் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். அவர் தீமைக்கு அடிபணியவில்லை, ஆனால் அதை நன்மையால் வெல்கிறார், நம்மில் இருக்கும் மிகவும் உண்மையான அன்பு செய்யும் திறனை மீட்டெடுக்கின்றார்.

இவ்வாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்ததும் கூடியிருந்தத் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

வருகின்ற ஆகஸ்டு 22, வெள்ளிக்கிழமை, திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் அரசியான தூய கன்னி மரியாவின் விழாவை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், இப்பூமியில் வாழும் அனைத்து மக்களின் நம்பிக்கையின் அன்னையாக அவர் திகழ்கின்றார் என்றும் கூறினார்.

நம்பிக்கையின் அரசியாக, அமைதியின் அரசியாகத் திகழும் அன்னை மரியாவிடம், உலகில் போரினால் துன்புறும் மக்களுக்கு அமைதியும் நீதியும்  கிடைக்கப்பெற செபிப்போம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஆகஸ்டு 22 ஆம் நாளை  உலக அமைதி மற்றும் நீதிக்கான நாளுக்காக சிறப்பித்து செபம் மற்றும் நோன்பிற்கான நாளாக அனுசரிக்கக் கேட்டுக்கொண்டார்.

புனித பூமி, உக்ரைன் மற்றும்  உலகின் பல பகுதிகளில்  போரினால் துன்புறும் மக்களை நினைவுகூர்ந்து செபிக்க வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அன்னை மரியா உலகிற்கு அமைதியையும் நீதியையும் வழங்கவும், தொடர் ஆயுத மோதல்களால் துன்பப்படுபவர்களின் கண்ணீரைத் துடைக்கவும் செபிப்போம் என்றும் எடுத்துரைத்தார்.

அமைதிக்கான வழியைக் கண்டுபிடிக்க அமைதியின் ராணி மரியாள் பரிந்துரை செய்வாராக என்று கூறி இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், துறவறக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் திருஅவையின் நன்மைக்கான அப்போஸ்தலிக்க ஆர்வத்துடன் உழைக்கவும், சபையின் தனிவரத்திற்கு சான்றுள்ளவர்களாகத் திகழவும் ஊக்கமூட்டினார்.

இத்தாலியில் பல பங்குத்தளங்களில் இருந்து வந்திருந்த மக்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், மக்கள் அனைவரும் மகிழ்வின் நற்செய்தியாளர்களாக மீட்பின் நற்செய்தியை எடுத்துரைக்கவும் கடவுளின் அழைப்பிற்குப் பதிலளிக்கவும் வலியுறுத்தினார். மேலும், ஆகஸ்டு 20 புதனன்று திருஅவை நினைவுகூரும் புனித பெர்னார்டு கியாராவால்லே அவர்கள் திருஅவையின் மறைவல்லுநராகவும், மரியன்னையைப் பற்றி பாடுபவராகவும் இருந்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு அமைதியைக் கொண்டு வந்து, நற்செய்தியை எவ்வாறு வாழ்வது என்பதைக் காட்டிய ஒரு மனிதராகத் திகழ்ந்தவர் புனித பெர்னார்டு என்றும், அவரது முன்மாதிரிகையான வாழ்க்கையானது நமது அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் நம்மை வழிநடத்தட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் தனது அப்போஸ்தலிக்க ஆசீரைக் கூடியிருந்த மக்களுக்கு வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஆகஸ்ட் 2025, 10:01

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >