புதிதாக திறக்கப்படவுள்ள Borgo Laudato Si
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
படைப்பு மற்றும் மனித மாண்பு குறித்த சுற்றறிக்கையின் 10 - வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளை, வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தந்தையரின் கோடைவிடுமுறை இல்லமான கஸ்தல் கந்தோல்போவில் வருகின்ற செப்டம்பர் 5- ஆம் தேதி மாலை 4 மணிக்கு Borgo Laudato Si’ என்னும் திட்டத்தை திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்.
முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2023-ஆம் ஆண்டு உயர்கல்வி மையத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் படைப்பையும், மனித மாண்பையும் பாதுகாப்பதும் குறிப்பாக கற்பித்தல் மட்டுமல்லாது வாழ்ந்து காட்டக் கூடிய, நற்செய்தியில் வேருன்றிய திறந்த மனம் படைத்த ஒரு முன்மாதிரியை உருவாக்குவதே ஆகும்.
135 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள இந்த இடம், வரலாற்றுச் சிறப்புமிக்க தோட்டங்கள், இல்லங்கள், நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் தளங்கள், விவசாய நிலங்கள், கல்வி, இயற்கை விவசாயம், மறுசீரமைப்பு உழவு போன்ற புதிய பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆன்மீகம், கல்வி, நிலைத்தன்மை ஆகியவை ஒன்றிணையும் இந்த தனித்துவமான சூழல், பயிற்சி, இறைவேண்டல், தியானம், மற்றும் இறைவனுடனும் படைப்புடனும் ஆழமான தொடர்புக்கான திறந்த மற்றும் வரவேற்கும் இடமாக திகழ்கிறது.
திறப்பு விழாவின் போது, திருத்தந்தை முதலில் போர்கோவின் வளாகங்களின் வழியாக ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்வதோடு, பணியாளர்கள், உடனுழைப்பாளர்கள், அவர்களது குடும்பங்கள், துறவிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், திட்டத்தின் ஒப்பந்ததாரர்கள், நன்கொடையாளர்கள் உள்ளிட்ட போர்கோவின் திட்டத்தில் தங்களது பங்களிப்பை நல்கிய அனைவரையும் சந்திப்பார். அதன் பின்னர், திருஅவையின் இந்தப் புதிய பணிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆசிருடன் கூடிய இறைவார்த்தை வழிபாட்டை தலைமையேற்று நடத்துவார்.
இந்த வரலாற்று நிகழ்வைக் சிறப்பிக்கும் வகையில், புகழ் பெற்ற இசையமைப்பாளர் அந்த்ரேயா போசெல்லியும், அவரது மகன் மத்தேயோவும் வழிபாட்டில் கலந்துகொண்டு திருத்தந்தையின் ஆசிருக்கு முன் ஒரு பாடலைப் பாடுவார்கள். உரோமை குரியா, நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தத் திட்டம் உயிரூட்டம் பெற ஆற்றல் சேர்த்தவர்கள் என அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்