"உங்களுக்கு அமைதி உரித்தாகட்டும்" நூல் வெளியீடு
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
கடவுளின் முதன்மைத்துவம், திருஅவையின் ஒன்றிப்பு, அமைதிக்கான தேடல் ஆயிவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் போதனனைகள் அடங்கிய லெவ் அவர்கள் எழுதிய, உலகிற்கும், திருஅவைக்குமான வார்த்தைகளான "உங்களுக்கு அமைதி உரித்தாகட்டும்" என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தந்தை 14- ஆம் லியோ அவர்கள் வழங்கிய உரைகளின் தொகுப்பு, 160 பக்கங்களைக் கொண்ட நூலாக Libreria Editrice Vaticana வெளியீட்டில், இத்தாலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில், திருத்தந்தையின் சிந்தனைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
திருஅவையில் உள்ள அனைவரும், குறிப்பாக அதிகாரப் பொறுப்புகளில் உள்ள அனைவரும் கடவுளை முதன்மை படுத்த வேண்டும் என்று திருத்தந்தையின் போதனைகள் வலியுறுத்துவதோடு, கிறிஸ்து நம்மில் நிலைத்திருக்கும்படி, நாம் நம்மை சிறியவர்களாக்கி, நாம் மறைந்து அவர் அறியப்பட்டு மகிமைப்படுத்தப்படவும் அழைப்பு விடுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு, அரசியலாளர்களுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதனின் இதயத்திற்கும் தனது எண்ணற்ற அமைதிக்கான அழைப்புகளை திருத்தந்தையின் போதனைகள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் வாழ்க்கைச் சுருக்கம் :
இராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் என்னும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், அமெரிக்காவின் சிகாகோவில் செப்டம்பர் 14, 1955 அன்று பிறந்தார். 1977 ஆம் ஆண்டு, அவர் புனித அகஸ்டின் சபையின் நவத்துறவு பயிற்சியில் சேர்ந்தார்; ஆகஸ்ட் 29, 1981 அன்று, அவர் தனது துறவற வார்த்தைப்பாடுகளைக் ஏற்றுக்கொண்டார், மேலும் ஜூன் 19, 1982 அன்று, அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். 2001 ஆம் ஆண்டு, புனித அகஸ்டின் துறவற சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு, பெருவின் சிக்லாயோவின்ஆயராக நியமிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், ஆயர்களுக்கான திருப்பீடத்துறையின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான பாப்பிறை அமைச்சகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2023 -ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று, கர்தினாலாக நியமிக்கப்பட்டார். 14-ஆம் லியோ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்து, 2025 கடந்த மே 8 ஆம் தேதியன்று திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்