திருஅவையின் மறைவல்லுனரான புனித அகுஸ்தினார்
மெரினா ராஜ் - வத்திக்கான்
புனித அகுஸ்தினாரின் வாழ்வும், பணிவாழ்வில் பெற்ற தலைமைத்துவத்திற்கான அவரது அழைப்பும், கடவுள் நமக்கும் ஏராளமான கொடைகளையும் திறமைகளையும் கொடுத்துள்ளார் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன என்று குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 28, வியாழன் தூய அகுஸ்தினாரின் திருவிழாவன்று அவரது வாழ்க்கையை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
கடவுளுக்கும் நமது அண்டை வீட்டில் வாழ்பவர்களுக்கும் அன்புப்பணிகள் ஆற்றுவதன் வழியாக, நமது வாழ்வின் நோக்கம், நிறைவு மகிழ்ச்சி ஆகியவற்றை நாம் பெறுகின்றோம் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
அகுஸ்தினார் சபை துறவியான திருத்தந்தை
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், புனித அகுஸ்தினார் சபையின் இளங்குருமடத்தில் கல்வி கற்றார். அதன்பின்னர், பென்சில்வேனியாவில் உள்ள வில்லானோவா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். 1977 -ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் தத்துவ இயலிலும் பட்டம் பெற்றார். அதே ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் சிகாகோவின் புனித லூயிஸில் உள்ள அகுஸ்தீன் (OSA) துறவற இல்லத்தில் இணைந்து துறவறப் பயிற்சி பெற்றார். 1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 2, அன்று தனது முதல் வார்த்தைப்பாட்டினையும், 1981- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29, அன்று அவர் தனது நிரந்தர வார்த்தைப்பாட்டினையும் அளித்தார்.
புனித அகுஸ்தினார்
இளம்வயதில் உலகப்போக்குகளால் தவறான வாழ்க்கை வாழ்ந்த புனித அகுஸ்தினார் உண்மை மற்றும் மகிழ்ச்சிக்கான தொடர் தேடல் கொண்டவராக இருந்தார். அவரது இத்தகைய தொடர் தேடலே அவரது மனமாற்றத்திற்கு அழைத்துச் சென்றது. அவரது தாயான தூய மோனிகா இவரது மனமாற்றத்திற்கு பெறும் உதவி செய்தார்.
கத்தோலிக்க திருஅவையின் ஒரு மாபெரும் புனிதராகவும் அறிஞராகவும் மாறிய புனித அகுஸ்தினாரின் திருவிழாவினை திருஅவையானது ஆகஸ்டு 28 அன்று சிறப்பிக்கின்றது.
புனித அகுஸ்தினாரின் படிப்பினைகள் போதனைகள் மற்றும் அவரது கடிதங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்து மனித மனத்தின் போராட்டங்களை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. இன்றைய நமது குழப்பமான, நிரந்தரம் இல்லாத, பல்வேறு பிரச்சனைகளை கொண்ட மிகவும் சத்தம் நிறைந்த உலகத்தில் புனித அகுஸ்தினின் வார்த்தைகள் கடவுளை நோக்கி நம்மை திருப்பும் ஒரு திசை காட்டியாக இருக்கின்றன.
திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள், புனித அகுஸ்தீன் அவர்களை, திருஅவையின் மறைவல்லுனராக, 1298ஆம் ஆண்டில் அறிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்