தாராளமனம், துணிவு கொண்டவர் மறைப்பணியாளர் அருள்தந்தை ANDRIUS RUDAMINA
மெரினா ராஜ் - வத்திக்கான்
மறைப்பணியாளரான அருள்தந்தை ANDRIUS RUDAMINA அவர்களின் சான்றுள்ள வாழ்விற்குக் கடவுளுக்கு நன்றி கூறுவதாகவும், அனைத்து மக்களுக்கும் நற்செய்தியின் மீட்புச் செய்தியைக் கொண்டு வருவதில் தாராள மனப்பான்மை மற்றும் துணிவுடன் நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 25, திங்களன்று, இயேசு சபை அருள்பணியாளரான லித்துவானியாவைச் சார்ந்த அருள்தந்தை ANDRIUS RUDAMINA அவர்கள், இந்தியாவிற்கு மறைப்பணியாளராக வருகை தந்த 400-ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் பழைய கோவாவில் உள்ள தூய கேத்தரின் பேராலய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள திருத்ததையின் செய்தியானது, கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயரும் CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மறைப்பணியாளர் ருதாமினாவைப் போன்று நாமும் பொறுமை மற்றும் அறிவாற்றலுடன் நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், பலரை மறைப்பணியாளர்களாக வளர்க்க ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
அருள்தந்தை ருதாமினாவின் மறைப்பணி பேரார்வம், உரையாடல் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பின் ஈர்க்கக்கூடிய மரபு ஆகியவற்றின் அடிப்படையில், உள்ளூர் தலத்திருஅவையின் கிறிஸ்தவர்கள் அனைவரும், எதிர்நோக்கின் இந்த யூபிலி ஆண்டில் நல்லிணக்கத்துடன் வாழ அழைக்கப்படுகின்றார்கள் என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
மேலும், சகோதரத்துவ நல்லிணக்கம், ஒப்புரவு, சமத்துவம் நிறைந்த சமூகத்தில் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாகச் செயல்படக்கூடிய மதச்சார்பற்ற மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலை வளர்ப்பதற்கு கிறிஸ்தவர்கள் அனைவரும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்