துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தையின் இரங்கல் தந்திச்செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவனின் இரக்கத்தையும் அமைதியையும் வேண்டி செபிப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாகவும் தந்திச்செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 27, புதன் அன்று அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரத்தில் ஒரு கத்தோலிக்கப் பள்ளியின் அருகில் உள்ள Annunciation ஆலயத்தில் இருந்தவர்களை, 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் துப்பாக்கியினால் தாக்கியதில் இரு சிறார் இறந்தும் பலர் காயமடைந்தும் உள்ள நிலையில் இந்நிகழ்விற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து இரங்கல் தந்திச்செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் இரங்கல் தந்திச்செய்தியானது, புனித பவுல் மற்றும் மினியாபோலிஸ் உயர் மறைமாவட்ட பேராயர் BERNARD HEBDA அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பயங்கரமான துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக தங்களது பிள்ளைகளை இழந்து வருந்துகின்ற குடும்பங்கள் அனைத்திற்கும் தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், இறந்த குழந்தைகளை எல்லாம் வல்ல இறைவனின் இரக்கத்தில் அர்ப்பணித்து நிறை அமைதி பெற செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சூழலினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு உதவ தங்களை அர்ப்பணித்தவர்கள், தன்னார்வலர்கள், மருத்துவ பணியாளர்கள், அருள்பணியாளர்கள் என காயமடைந்த அனைவருக்காகவும் செபிப்பதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், ஹோலி ஏஞ்சல் கத்தோலிக்க பள்ளி, புனித பவுல் மற்றும் மினியாபோலிஸ் உயர் மறைமாவட்டம் மற்றும் இரட்டைக் கோபுர நகரத்தைச் சார்ந்த மக்கள் அனைவருக்கும் கடவுளின் அமைதி, ஆற்றல், ஆறுதல் கிடைக்கப்பெற வேண்டி தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாக எடுத்துரைத்துள்ளார்.
Annunciation ஆலயத்திற்கு அருகில் ஹோலி ஏஞ்சல் பள்ளியும் அமைந்துள்ளதால், புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ஆலயத்தில் அப்பள்ளி மாணவர்கள் நிரம்பியிருந்தனர் என்றும், காயமடைந்த 17 பேரில் 14 பேர் சிறார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்திய 23 வயதான ராபின் வெஸ்ட்மேன், சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார் என்றும், அவருக்கு 'குறிப்பிடத்தக்க குற்றவியல் பின்னணி' இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தில் இருந்த மக்கள் மீது, சன்னல்கள் வழியாக அம்மனிதர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்