MAP

பிரெஞ்சு பீடப்பணியாளர்களுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ பிரெஞ்சு பீடப்பணியாளர்களுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ   (@Vatican Media)

இயேசுவின் சிறந்த சீடர்களாக நாம் மாற வேண்டும் – திருத்தந்தை

தனது வாழ்வில் ஒவ்வொரு நாளும் கடவுளை தனிப்பட்ட முறையில், விதிவிலக்கற்ற முறையில் சந்தித்து, அவரை உலகிற்குக் கொடுக்கும் அருள்பணியாளரின் வாழ்க்கையானது, அழகானது, அற்புதமானது - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுள் தன்னை அன்பினால் நமக்கு மீண்டும் மீண்டும் கொடுக்கும் நேரம் திருநற்கருணை வழிபாடு என்றும், எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டில் நாம் கடவுளிடம் திரும்பி வரவும், நம்பிக்கையிலும் அன்பிலும் வளரவும், சிறந்த சீடர்களாக மாறவும் இறைவன் நமக்கு உதவுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்ட் 25, திங்களன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்த  திருவழிபாட்டுப் பீடப்பணியாளர்கள் ஏறக்குறைய 360 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நம்மைச் சுற்றியுள்ளவர்கள் துன்பம், நோய், இயலாமை, தோல்வி, இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படும்போதும், சோதனையை எதிர்கொள்ளும்போதும், துயரத்தால் நம் இதயம் பதட்டம் நிறைந்ததாக இருக்கும்போதும், அச்சூழலில் இயேசு மட்டுமே நம்மைக் காப்பாற்ற வருகிறார், வேறு யாரும் அல்ல என்றும், ஏனெனில் அவருக்கு மட்டுமே அந்த ஆற்றல் இருக்கிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நற்கருணை என்பது திருஅவையின் புதையல், புதையல்களுக்கு எல்லாம் மேலான புதையல் என்றும், திருப்பலி கொண்டாட்டம் இன்று நம்மையும் நாம் வாழும் உலகையும் காப்பாற்றுகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டில் நாம் கடவுளிடம் திரும்பவும், நம்பிக்கையிலும் அன்பிலும் வளரவும், சிறந்த சீடர்களாக மாறவும் இறைவன் நமக்கு உதவுகிறார் என்றும், இதனால் நம் வாழ்க்கை அவரது பார்வையில் அழகாகவும் நல்லதாகவும் இருக்கின்றது நிலையான வாழ்வை நம்மால் பார்க்க முடிகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுள் தன்னை அன்பினால் நமக்கு மீண்டும் மீண்டும் கொடுக்கும் தருணமே திருநற்கருணை வழிபாடு என்றும், இத்திருப்பலிக்கு, கிறிஸ்தவர்கள் கடமைக்காக செல்வதில்லை, மாறாக அவர்களுக்கு அது முற்றிலும் தேவைப்படுவதால் செல்கின்றார்கள் என்றும் கூறினார்.

கைம்மாறு கருதாது தனது உயிரை நமக்காகக் கையளித்த கடவுள் தங்களது வாழ்க்கைக்குத் தேவை என்று கிறிஸ்தவர்கள் உணர்ந்ததால் திருப்பலியில் பங்கேற்கின்றார்கள் என்றும் திருப்பலி என்பது கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சிக்கான நேரமாக இருக்கும் அதேவேளையில், கடவுளின் அருளை நம்மை நோக்கி ஈர்க்கும் ஒரு தீவிரமான, புனிதமான தருணம் என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

பீடப்பணியாளர்கள் தங்களது செயல்கள், அமைதி, பணி, மாண்பு, வழிபாட்டின் அழகு, அடையாளச்செயல்கள் போன்றவற்றால், நம்பிக்கையுள்ள மறைபொருளின் புனிதத்திற்குள் அனைவரையும் கொண்டு சேர்க்கட்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

பிரான்சில் நிலவும் அருள்பணியாளர்களுக்கான பற்றாக்குறையானது தலத்திருஅவைக்கும், நாட்டிற்குமான துரதிர்ஷ்டம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அழைத்தலின் மேன்மையை, அழகை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றும், தனது வாழ்வில் ஒவ்வொரு நாளும் கடவுளை தனிப்பட்ட முறையில், விதிவிலக்கற்ற முறையில் சந்தித்து, அவரை உலகிற்குக் கொடுக்கும் அருள்பணியாளரின் வாழ்க்கையானது, அழகானது, அற்புதமானது என்றும் எடுத்துரைத்தார்.

பீடப்பணியாளர்களின் எண்ணிக்கையும், அவர்களது நம்பிக்கையும், எதிர்நோக்கின் அடையாளமாகவும் மிகப்பெரிய ஆறுதலாகவும் இருக்கின்றது என்று வாழ்த்திய திருத்தந்தை அவர்கள்,  துணிவுடன் விடாமுயற்சியுடன் இருங்கள், பீடப்பணியாளராக பணியாற்றும்போது கிடைக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியை சான்றுகளாக சுற்றியுள்ள மக்களுக்குக் கொடுங்கள் என்றும் வலியுறுத்தினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஆகஸ்ட் 2025, 12:47