MAP

பிரான்சின் கத்தோலிக்க அரசியல் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை  பிரான்சின் கத்தோலிக்க அரசியல் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை   (@VATICAN MEDIA)

இயேசுவுடனான தனிப்பட்ட உறவால் ஆற்றல் பெறும் கிறிஸ்தவ தலைவர்கள்

சமூகப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆற்றலைக் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் திருமுழுக்கின் வழியாக அவர்களுக்குள் விதைத்த தொண்டு என்ற நற்பண்பிலிருந்து பெறுகிறார்கள் - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

கிறிஸ்தவ தலைவர்கள் இயற்கையாகவே பிறரன்புப் பணிகள் ஆற்றி சிறப்பாக வாழ்ந்து, தங்களுக்குள் செயல்படும் நம்பிக்கைக்கு சான்றுபகரும் அளவிற்கு ஆற்றல் பெறுகின்றார்கள் என்றும், அவர்களுக்கு அறிவூட்டி, இத்தகைய ஆற்றலினை அளிப்பது கிறிஸ்துவுடனான அவர்களின் தனிப்பட்ட உறவு என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆகஸ்டு 28, வியாழனன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில், பிரான்சின் Val de Marne பகுதி (Diocese of Créteil) கிறிஸ்தவ அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், எதிர்நோக்கால்  பலப்படுத்தப்பட்ட  அன்றாட வாழ்க்கைப்பணிகளை ஆற்ற அவர்களுக்கு வலியுறுத்தினார்.

மிகவும் நீதியான, மனிதாபிமான, உடன்பிறந்த உணர்வு கொண்ட உலகத்தை கட்டியெழுப்புவதில் உறுதியுடன் செயல்படுங்கள் என்றும், அப்போதுதான் நற்செய்தியால் மட்டுமே நிறைந்த உலகமாக நமது உலகம் இருக்க முடியும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மேற்கத்திய சமூகங்கள் அனுபவிக்கும் பல்வேறு வகையான அதிகப்படியான செயல்களை எதிர்கொள்ளும்போது, கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவிடம் திரும்பவேண்டும் என்றும், நமது பொறுப்புகளைச் செயல்படுத்துவதில் நாம் தனியாக சிறப்பாகச் செயல்பட முடியாது என்பதை உணர்ந்து, அவருடைய உதவியைக் கேட்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இயேசு தனது இறப்பு மற்றும் உயிர்ப்பு வழியாக அடைந்த மீட்பானது, கலாச்சாரம், பொருளாதாரம், வேலை, குடும்பம், திருமணம், மனித மாண்பு, வாழ்க்கைக்கான மரியாதை, தொடர்பு, கல்வி, அரசியல் நலவாழ்வு போன்ற மனித வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கியது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

கிறிஸ்தவத்தை ஓர் எளிய தனிப்பட்ட பக்தியாகக் குறைக்க முடியாது, ஏனெனில் இது கடவுள் மற்றும் அண்டை வீட்டாரின் அன்பால் குறிக்கப்பட்ட சமூகத்தில் வாழும் முறையை உள்ளடக்கியது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நம் அருகில் வாழ்பவர்கள் இனி எதிரிகள் அல்ல, மாறாக கிறிஸ்துவில் நம் சகோதரர்கள் என்றும் எடுத்துரைத்தார்.

வன்முறை, பாதுகாப்பின்மை, நிச்சயமற்ற தன்மை, போதைப்பொருள் வலையமைப்புகள், வேலையின்மை, இணக்கமின்மை போன்ற சமூகத்தில் நிலவும் சில பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும், இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆற்றலைக் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் திருமுழுக்கின் வழியாக அவர்களுக்குள் விதைத்த தொண்டு என்ற நற்பண்பிலிருந்து பெறுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இன்றைய உலகின் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய வழிகளைத் தூண்டும் கட்டமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் சட்ட அமைப்புகளை உள்ளிருந்து ஆழமாகப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆற்றலானது, கடவுளிடமிருந்து நாம் பெற்ற கொடை ஆற்றல் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இந்தக் கண்ணோட்டத்தில், பிறரன்புப்பணிகள் சமூக மற்றும் அரசியல் தொண்டுப் பணிகளாகின்றன என்றும் கூறினார்.

“சமூக தொண்டுப்பணிகளானது பொது நன்மையை நாம் அன்பு செய்யவும், அனைத்து மக்களின் நன்மையை திறம்பட நாடவும் செய்கிறது” என்ற திருஅவை சமூகக் கோட்பாட்டின் கருத்துக்களை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இதனால்தான் கிறிஸ்தவத் தலைவர்கள் இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்ள சிறப்பாகத் தயாராக இருக்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஆகஸ்ட் 2025, 15:22