MAP

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (@Vatican Media)

75-ஆவது இத்தாலிய தேசிய திருவழிபாட்டு வாரம்

தேசிய வழிபாட்டு வாரத்தில் பங்கேற்கும் அனைவரின் சிந்தனையைக் கருத்தரங்குகள் ஊக்குவிக்கட்டும். மேய்ப்புப்பணிக்கான நடைமுறை வழிகாட்டுதல்களை உள்ளங்களில் உருவாக்கட்டும் – திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருஅவையின் திருவழிபாட்டுச் செயல்பாடுகளில் இறைமக்கள் இன்னும் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்றும், புனித கொண்டாட்டங்களின் நற்செய்தி அறிவிப்புத் தன்மை குறித்த புதுப்பிக்கப்பட்ட விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் 75-ஆவது தேசிய திருவழிபாட்டு வாரத்திற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 26, செவ்வாய்க்கிழமை நேப்பிள்ஸ் மறைமாவட்டத்துடன் இணைந்து கத்தோலிக்க திருவழிபாட்டு செயல்களுக்கான இயக்கத்தாரால் சிறப்பிக்கப்படும் 75-ஆவது இத்தாலிய தேசிய திருவழிபாட்டு வாரத்தின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தியானது, Catanzaro-Squillace பெருநகர உயர் மறைமாவட்டத்தின் பேராயரும், திருவழிபாட்டு செயல்களுக்கான இயக்கத்தின் தலைவருமான  பேரருள்திரு. Claudio Maniago அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தேசிய வழிபாட்டு வாரத்தில் பங்கேற்கும் அனைவரின் சிந்தனையைக் கருத்தரங்குகள் ஊக்குவிக்கட்டும் என்றும், மேய்ப்புப்பணிக்கான நடைமுறை வழிகாட்டுதல்களை உள்ளங்களில் உருவாக்கட்டும் என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், இதனால் இறைமக்கள் ஆலயங்களை வழிபாட்டுத் தலங்களாகவும், நம்பிக்கை கொண்டாடப்படும் இடங்களாகவும் உணரட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறைவன் வாழும் திருவழிபாட்டுச் சடங்குகளில் கலந்து கொள்வதன் வழியாக நாம், சுறுசுறுப்பாக இருப்பதையும், சகோதரத்துவ ஒற்றுமை வாழும் இடங்களாக நம் இல்லங்கள் இருப்பதையும் மீண்டும் கண்டுபிடிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இத்தாலியத் தலத்திருஅவையில் இறைமக்களின் திருவழிபாட்டு உயிரூட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், தங்கள் பணிகள் மற்றும் செயல்களின் பன்முகத்தன்மையில் இறைவனைப் போற்றிப் புகழ அழைக்கப்பட்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஆகஸ்ட் 2025, 13:37