நிறைவானவற்றை, தூய்மையானவற்றை விரும்புங்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடனான சந்திப்பு நமது இருப்பை மாற்றுகின்றது, நமது விருப்பங்கள், ஆசைகள், மற்றும் எண்ணங்களை ஒளிரச்செய்கின்றது என்றும், இளைஞர்கள் எங்கிருந்தாலும் பெரிய காரியங்களை, நிறைவானவற்றை, தூய்மையானவற்றை மட்டும் விரும்புபவர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்ட் 3, ஞாயிறன்று உரோமின் Tor Vergata என்னும் பகுதியில் நடைபெற்ற இளையோர் யூபிலிக்கான திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், உயிர்த்த இயேசு கிறிஸ்துவை சந்தித்த எம்மாவூ சீடர்கள் பற்றியக் கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
எல்லாவற்றையும் சாதாரணமாகவும் நிலையானதாகவும் எடுத்துக் கொள்ளும் வாழ்க்கைக்காக அல்ல, மாறாக அன்பில், அன்பில் தொடர்ந்து மீண்டும் உருவாக்கப்படும் ஓர் இருப்புக்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றும், சிறுகுழந்தையைப்போல கண்களை உயர்த்தி, கால்விரல்களை எக்கி ஜன்னல் வழியே நமக்காகக் காத்துக்கொண்டிருக்கும் கடவுளைப் பார்க்க முயல்வோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நமது இதயங்களை அகலமாகத்திறந்து, அவரை நமது இதயத்திற்குள் நுழைய அனுமதித்து, முடிவில்லா விண்ணக வாழ்வின் இடங்களைப் பார்ப்பது மிக அழகானது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நமக்காகக் காத்திருந்து நமது ஆன்மாவின் ஜன்னலைத் தட்டுகின்ற அவர்முன் நம்மை ஒப்படைப்போம் என்றும் கூறினார்.
கிறிஸ்துவைப்போல பரிவு....
உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன? வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்ன? அர்த்தமின்மை, சலிப்பு மற்றும் அற்பத்தனத்தில் சிக்கிக் கொள்வதிலிருந்து நம்மை எது விடுவிக்க முடியும்? என்ற பல கேள்விகள் நமது இதயங்களைப் பற்றி எரியச்செய்யும் கேள்வியாக இருக்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நமது இருப்பின் முழுமை நாம் எதைச் சேகரிக்கிறோம் என்பதைப் பொறுத்ததோ அல்லது, நம்மிடம் இருப்பதைப் பொறுத்ததோ அல்ல. மாறாக, அது நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்ற மற்றும் பகிர்ந்து கொள்கின்ற விடயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பொருள்களை வாங்குதல், சேமித்து வைத்தல், பயன்படுத்துதல் மட்டும் போதாது, உலகில் உள்ள அனைத்தும் நம்மை கடவுளுடனும் நம் சகோதர சகோதரிகளுடனும் உண்மையில் ஒன்றிணைக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்றும், இவை நம் வாழ்வில் அர்த்தமுள்ளதாக இருப்பதை உணர, கிறிஸ்துவைப் போலவே பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, மன்னிப்பு, அமைதி ஆகியவற்றை உணர வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது
“எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது” (உரோ:5:5) என்பதன் அர்த்தத்தை இதன் அடிப்படையில் நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வோம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இயேசுவே நமது எதிர்நோக்கு என்பதை இளைஞர்கள் உணர்ந்து வாழ வலியுறுத்தினார்.
விரைவில் புனிதர்களாக அறிவிக்கப்பட இருக்கும் அருளாளர்கள், பியர்ஜியோர்ஜியோ ஃப்ராசாத்தி மற்றும் கார்லோ அகுதீஸ் நமக்குக் கற்பித்தபடி, இறைவனுடன் எப்போதும் ஒன்றித்து இருப்போம், அவருடைய நட்பில் நிலைத்திருப்போம் என்றும், எப்போதும், செபம், ஆராதனை, நற்கருணை வழிபாடு, அடிக்கடி ஒப்புரவு அருளடையாளம் பெறுதல், தாராளமான பிறரன்புப் பணிகள் ஆகியவற்றால் இறைவனுடனான நட்புறவை வளர்ப்போம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
“இளைஞர்களே நீங்கள் எங்கிருந்தாலும் பெரிய காரியங்களை, நிறைவானவற்றை தூய்மையானவற்றை மட்டும் விரும்புங்கள், குறைவானவற்றில் திருப்தி அடையாதீர்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அப்போது தான் நற்செய்தியின் ஒளி ஒவ்வொரு நாளும், உங்களிலும் உங்களைச் சுற்றியும் வளர்வதைக் காண்பீர்கள்” என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்