MAP

திருத்தந்தை பதினான்காம் லியோ. திருத்தந்தை பதினான்காம் லியோ.  (AFP or licensors)

கிறிஸ்துவில் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடைய முயல்வோம்

இளைஞர்களுக்கான யூபிலி நாள் நிகழ்வின் சிறப்பாக ஆகஸ்ட் 2 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 3 மணிமுதல் திருவிழிப்பு நிகழ்வானது நடைபெற இருக்கின்றது. இரவு 8. 30 மணியளவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு உரையாற்ற இருக்கின்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இசை, நடனம் மற்றும் பல கலை வடிவங்கள் வழியாக இளைஞர்களுக்கான யூபிலியில் கலந்துகொள்ளும் இளைஞர்களுடன் மகிழ்வினைப் பகிர்ந்து கொள்ளும் தருணமானது,  உண்மையிலேயே நம் அனைவருக்கும் மற்றும் முழு திருஅவைக்கும் ஒரு கொடை என்றும், கிறிஸ்துவில் உண்மையான மகிழ்ச்சியை, ஆனந்தத்தைக் கண்டடைய முயல்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்ட் 2, சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், இளைஞர் யூபிலியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கான இரவு விழிப்பு செபவழிபாடு மற்றும் கலை நிகழ்ச்சிகளை வழிநடத்த இருக்கும் கலைஞர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

முன்னதாக திருத்தந்தைக்கு வாழ்த்துக்கூறி நன்றி தெரிவித்த கர்தினால் ரீனோ பிசிகெல்லாவைத் தொடர்ந்து கலைஞர்களுடன் உரையாடிய திருத்தந்தை அவர்கள்,  உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் இலட்சக் கணக்கான இளைஞர்களுடன் இத்திருவழிபாட்டில் பங்கேற்பது ஒரு பெரிய பாக்கியம், ஆசீர், சிறப்பு என்றும் எடுத்துரைத்தார்.

உரோம் மறைமாவட்ட ஆயராக, திருத்தந்தையாக இந்நிகழ்வில் பங்கேற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், நாம் ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்தும் நம்பிக்கை, உற்சாகம், மகிழ்ச்சியானது நம் இதயத்தில் உள்ளவற்றையே வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார்.    

எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் நமக்குக் கொடையாக அளித்த அன்பு, மகிழ்ச்சி,ஆர்வம் போன்றவற்றுடன் நம்பிக்கையையும், இசை, நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக     

அனுபவிக்க வேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,  உண்மையான மகிழ்ச்சியைத் தேடிக் கண்டடைய இளைஞர்களுக்கு அக்கலைஞர்கள் உதவுவதற்காக தனது நன்றியினையும் தெரிவித்தார்.

கிறிஸ்துவில் உண்மையான மகிழ்ச்சி, ஆனந்தம் போன்றவற்றை இளைஞர்கள் கண்டறிய நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்றும்,  உண்மையான மகிழ்ச்சியும், ஆனந்தமும் இளைஞர்களுக்கு மிக அதிகமாக தேவைப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இளைஞர்களுக்கான யூபிலி நாள் நிகழ்வின் சிறப்பாக ஆகஸ்ட் 2 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 3 மணிமுதல் திருவிழிப்பு நிகழ்வானது நடைபெற இருக்கின்றது. இரவு 8.30 மணியளவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு உரையாற்ற இருக்கின்றார். மேலும் மறுநாள் ஆகஸ்ட் 3, ஞாயிறன்று காலை 9 மணியளவில் நடைபெறும் திருப்பலியையும் தலைமையேற்று சிறப்பிக்க இருக்கின்றார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஆகஸ்ட் 2025, 11:43